ரணிலின் ப்ளான்! கடுமையாக விமர்சித்த பௌத்த தேரர்

பிரதமர் ரணிலின் நூறு நாள் வேலைத் திட்டம் என்பது இது அமெரிக்காவிலிருந்து பிரதிசெய்யப்பட்ட ஒன்று என்று சியம் மகா பீடத்தின் ரங்கிரி தம்புளு விகாரையின் மகாநாயக்கர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தின வைபவத்தில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஆட்சியேற்ற போது நடைமுறைப்படுத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டமானது மடத்தனமானது என்றும், அதனை யார் தயார் செய்தார் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை நேரடியாக விமர்சித்தார் என்று விமர்சனங்கள் எழுந்ததுடன், கொழும்பு அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் இது தொடர்பாக உடனடியாக கலந்தாலோசனையும் நடத்தியிருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதியின் அன்றைய உரை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சியம் மகா பீடத்தின் ரங்கிரி தம்புளு விகாரையின் மகாநாயக்கர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர், இந்த வேலைத்திட்டத்திற்கு பிரதமர் தான் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தேரர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தில் உருவான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த 85 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இது அமெரிக்காவிலிருந்து பிரதிசெய்யப்பட்ட ஒன்று.

இதேவேலைத்திட்டத்தை ஐ.தே.க. கடந்த 90 களிலும் அறிமுகம் செய்திருந்தது. இதனால், இந்த வேலைத்திட்டம் பிரதமருடையது என்பது உறுதியாகின்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது அமெரிக்காவின் பிரதியன்றி, இலங்கையினது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஜனாதிபதியின் அன்றைய உரை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.