இந்தியா தவிர்க்கமுடியாத அரசியல் குரல் கருணாநிதி!

வர் பிரதமராக இருந்ததுமில்லை; அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. இவரது கட்சியோ மாநிலக் கட்சிதான். ஆனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடமிருக்கிறது.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதி என்ற பெயரை தவிர்த்துவிட முடியாது. ஓர் அரசியல்வாதிமீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். அவர் நல்லவரா, கெட்டவரா என்கிற விஷயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஆனால், அரசியலில் ஒருவரை மக்கள் தோற்கவிடவே இல்லை. எப்போதும் தங்களுடைய பிரதிநிதியாகவே அவரைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதற்கு கருணாநிதியைவிடச் சிறந்த உதாரணம் வேறு யாரும் இல்லை.

அரசியல்வாதி, சினிமா வசனகர்த்தா, நாடக இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகங்கள்.

மேலாண்மைப் படிப்புகளில் வரும் மல்டி டாஸ்கிங் என்ற வார்த்தைக்கு உதாரணமாக இருந்தவர்களில் கருணாநிதி முக்கியமானவர். அவர், கடந்துவந்த காலத்தில் சில சுவாரஸ்யங்கள்…

கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான்… கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்தி வந்தது தமிழ் சினிமா.

இந்த ட்ரெண்டை மாற்றி, “மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை நல்ல சமூகக் கருத்துகள்தான்” என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில் சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

கருணாநிதியின் `மந்திரிகுமாரி’, `பராசக்தி’ பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதை சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின.

அரசியலில் நொடித்துப்போனால் நான் சினிமாவைவும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வைப் பட்டிதொட்டிக்கு கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

திராவிடக் கழகத்தில் கருணாநிதி இருந்தபோது அங்குள்ள எல்லாருமே டிகிரி முடித்தவர்கள்.. அந்த இடத்தில்தான் அரசியலுக்குள் நுழைகிறார் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கருணாநிதி.

ஆங்கிலம் தெரியாதவர்; அதிகம் படிக்காதவர் என்று பல விஷயங்கள் இருந்தாலும் அவர் கடின உழைப்பாளி. ஊர் ஊராக, தொகுதி… தொகுதியாக அலைந்து வேலை பார்க்கக்கூடியவர்.

கட்சி நிதிக்காகத் தமிழ்நாடு முழுக்க 10 லட்சம் ரூபாய் புரட்ட வேண்டும் என்றபோது 11 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்தவர், கருணாநிதி.

மிகவும் சோஷியலான நபர்; சக தொண்டர்களுடன் நெருங்கிப் பேசி, பழகக் கூடியவர். அந்த விஷயம்தான் அண்ணாவுக்கு பிறகு யார் என்ற சூழல் ஏற்படும்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்களைக் கருணாநிதி என கை காட்ட வைத்தது. இப்படித்தான் அரசியலுக்குள் ஒரு தவிர்க்க முடியாத நபராக அடியெடுத்து வைத்தார் கருணாநிதி.

தனது முதல் சட்டசபை உரைக்கு கருணாநிதி ஒத்திகை பார்த்துவிட்டு போய் சட்டமன்றத்தில் பேசினாராம். செய்யும் விஷயத்தைத் தெளிவாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும் என்பதை தன் முதல் உரையிலிருந்து செய்யத் தொடங்கியவர் கருணாநிதி.

ஆரம்பத்திலிருந்தே பேச்சில் வல்லவர்… கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது, கற்பனைத் திறன், சாதுர்யமாக எதிரியின் பேச்சுக்குப் பதிலளிப்பது, பேச்சில் உள்ள நக்கல், நையாண்டி என கருணாநிதிக்கு எல்லாமே ப்ளஸ்.

கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதிக்கே உரித்தான கலை. ஒருமுறை,“அடைந்தால் திராவிட நாடு  இல்லையென்றால் சுடுகாடு… என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன்.

அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: “இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!” என்று.  தர்க்கம் செய்வது கருணாநிதிக்கு கைவந்த கலை… தலைக்கு மேல் பிரச்னை வந்தாலும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார் கருணாநிதி. இதற்குக் காரணம் அவர் அதிகம் படிப்பதுதான்.

எதிரியைப் பாராட்டி நெகிழவைப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். அழகாகத் திட்டிப் பாராட்டுவார். “தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” – இந்தக் கவிதையைத் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, “தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்றார். அதன்பின் பீட்டர் அல்போன்ஸுக்குப் பேச வாயே வரவில்லை.

1996 – 2001 வரையிலான ஆட்சி, திமுக தலைவரின் ரிப்போர்ட் கார்டில் மிக முக்கியமான காலம். 1976 முதல் 1989 வரை 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனதுபோல கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

அப்போது மிகவும் சோர்ந்துபோனவர், 1996 – 2001-இல் ஐந்தாண்டுக் காலம் முழுமையாகக் கிடைத்தபோது ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுத்தார்.

அந்த ஐந்து வருடம்தான் கருணாநிதி முதல்வராக இருந்ததிலேயே சிறந்த காலம். ராமானுஜம் கமிஷன் அமைத்தார்; அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து தனித்தனியாகக் கூட்டம் நடத்தினார்.

அலுவலகம் செல்வதுபோல சின்சியராகச் சட்டசபையில் இருந்து பணிகளைக் கவனித்தார். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட்போல சட்டசபையை நடத்தினார் .

இவ்வளவு முக்கியமான அரசியல்வாதியாக இருந்த கருணாநிதி, ஏன் பிரதமராகவில்லை என்பது எல்லாருக்கும் இருந்த கேள்வி? அவரைச் சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது.

Indira__Karunanidhi_12239  இந்தியா தவிர்க்கமுடியாத அரசியல் குரல் கருணாநிதி! Indira  Karunanidhi 1223980-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய், 2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். இவருக்காக காத்திருக்காத டெல்லி வாலாக்களே இல்லை.

ஒருமுறை விமான நிலையத்தில், “நீங்கள் ஏன் பிரதமராகக் கூடாது” என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, “என் உயரம் எனக்குத் தெரியும்” என்று பிரதமர் பதவியில் நாட்டமில்லாமல் பதில் சொன்னார்.

தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி… இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கும் இடமுண்டு. கருணாநிதியால் இன்று எழுத முடியவில்லை; பேச முடியவில்லை.

அவர் ஆக்ட்டிவாக இல்லை என்கிறார்கள். ஆனாலும் அவரது எதிரிகள் இவரை இன்னும் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். இந்தப் பிம்பம்தான் கருணாநிதியிடம் மற்ற அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

கருணாநிதி கடலை சாப்பிடும்போது இரண்டு நல்ல கடலைகளை எடுத்து வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவாராம். ஒருவேளை, கடைசியில் கடலை கசந்துவிட்டால் இந்த இரண்டு கடலைகளை மென்று கசப்பைப் போக்கிக்கொள்வாராம். அதுதான், அவருடைய அரசியலும். தனது தோல்விகளுக்குப் பிறகு அதிலிருந்து மீள ஒரு பேக்-அப் வைத்திருப்பார்.

இன்று, பேரன் கிரிக்கெட் ஆட பந்து போடுகிறார்; `பாட்ஷா’ படம் பார்க்கிறார்; சி.எஸ்.கே வெற்றிக்காகச் சிரிக்கிறார்; ஸ்டாலினையும், துரைமுருகனையும் அடையாளம் கண்டுகொள்கிறார்.

ஸ்டாலின் செயல் தலைவராகத் தி.மு.க-வை வழிநடத்தினாலும் அந்தக் கட்சியின் தொண்டனின் கனவு எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கோபாலபுரத்தில் பேசமுடியாமல் படுத்திருக்கும் கருணாநிதி. தன் கரகரக் குரலால் என்றாவது ஒருநாள் தொண்டர்கள் முன் தோன்றி, “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…” என்று ஆரம்பித்துப் பேசமாட்டாரா என்ற ஏக்கம் மட்டும்தான்.

நினைவு நன்றாகவே இருக்கிறது; முதுமைதான் வாட்டுகிறது. அவர் மட்டும் ஆக்ட்டிவாக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு ஆரம்பித்து நீட் பிரச்னை வரை எல்லாவற்றுக்கும் பதிலளிக்க முடியாத கேள்விகளால் ஆளும்கட்சியை விளாசியிருப்பார்.

கால் பக்க அறிக்கையோ, ஒரு வார்த்தை பன்ச்சோ கொடுத்து ஆட்சியாளர்களை அவதிக்குள்ளாக்கியிருப்பார். அதேவேளையில், இன்னமும் தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கின்றனர் “தலைவர் வருவார், கரகரக்குரலில் பேசுவார்” என்ற நம்பிக்கையில்.