வெளியுறவு அமைச்சர் சென்ற விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென்னாபிரிக்கா சென்ற போது அவர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார்.

இவர் பயணம் செய்த விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானம், திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி செல்ல ஏற்பாடாகி இருந்தது.அதன்படி திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு, பிற்பகல் 2.08 மணிக்கு விமானம் புறப்பட்டது.

இந்த விமானம் மாலி வான்பரப்பை மாலை 4.44 மணிக்கு கடந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தின் கட்டுப்பாடு மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் மொரீஷியஸ் வான்பரப்பை அடைந்த அந்த விமானத்தால், அந்த நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது ரேடாரின் இணைப்பில் இருந்து விடுபட்டு திடீரென மாயமானது. இதனால் மொரீஷியஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுஷ்மாவின் விமானம் நடுவானில் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே ‘இன்செர்பா’ (நிச்சயமற்ற நிலை) எனப்படும் உஷார் நிலையை பிறப்பித்தனர். பிரச்சினையில் சிக்கும் விமானங்களை மீட்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் முதல் கட்ட உஷார் நிலை இதுவாகும்.

எனினும் 14 நிமிடங்களுக்குப்பின் அதாவது மாலை 4.58 மணிக்கு சுஷ்மாவின் விமானம் மொரீஷியஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. பின்னர் அது மொரீஷியசில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பின்னரே விமானப்போக்குவரத்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுஷ்மாவின் விமானம் சென்ற கடற்பரப்புக்கு மேலான அந்த பாதையில் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. எனவே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இதுபோன்று விமானங்கள் மாயமானால் 30 நிமிடம் வரை காத்திருப்பது வழக்கம். அதன் பின்னரே ‘உஷார்’ நிலை பிறப்பிப்பார்கள்.

ஆனால் இந்த விமானத்தில் சென்றது முக்கிய பிரமுகர் (மந்திரி) என்பதால் 30 நிமிடம் காத்திராமல், உடனே ‘உஷார்’ நிலையை பிறப்பித்திருக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து புறப்பட்டு தென்னாபிரிக்கா போய் சேர்ந்தார். அங்கு அவரை தென் ஆப்பிரிக்க வெளியுறவு துணை மந்திரி லவெல்லின் லாண்டர்ஸ் வரவேற்றார்.

தென்னாபிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தின் 125-வது நினைவையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.