இலங்கையின் முன்னேற்றங்களுக்கு இராணுவ- இராணுவ பரிமாற்றங்களை அதிகரிப்பது, அபிவிருத்தி உதவி, ஆட்சியியல் திட்டங்கள் என்பனவற்றில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு முக்கியமானது என அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவர் மக் தோன்பெரி தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம், அமெரிக்க விசேட குழுவினர் இலங்கை வந்திருந்தனர். இக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹென்றி கியூலர், விக்கி ஹாட்ஸ்லெர் அவர்களுடன், மெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவர் மக் தோன்பெரி இணைந்திருந்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதன் பின்னர் அவரிடம் சர்வதேச ஊடகம் ஒன்று இலங்கை பயணம் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தது. இது தொடர்பில் பதில் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை நீண்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் முன்நோக்கிச் செல்வதற்கு இன்னும் அதிகமாக- கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கிறது.
இந்த முக்கியமான தருணத்தில், இலங்கையின் முன்னேற்றங்களுக்கு இராணுவ- இராணுவ பரிமாற்றங்களை அதிகரிப்பது, அபிவிருத்தி உதவி, ஆட்சியியல் திட்டங்கள் என்பனவற்றில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு முக்கியமானது.
இலங்கையுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையான உறவு இருக்கிறது.
இந்த உறவுகளை, மேலும் ஆழமாக முன்கொண்டு செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மிக முக்கியமான கேந்திரமாகும்.
இந்த மூலோபாய தளமானது, வளமான, நிலையான ஜனநாயகம் என்பனவற்றைக் கொண்டிருப்பது முக்கியமானது. அதற்காக அமெரிக்கா தனது ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்.