தன் தாய் மண்ணில் வாழும் மக்களுக்காக போராட்டத்தில் குதித்து துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
காரப்பேட்டையில் வசித்து வந்த 17 வயதேயான மாணவி ஸ்னோலின் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்புக்களை கண்முன்னே தினம் தினம் கண்டு வந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் திகதி எதிர்ப்பு தெரிவித்து வீதியிலிறங்கிய மாபெரும் அணியில் பங்கு கொண்டார்.
தாயுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பினை மாணவி ஸ்னோலின் தெரிவித்திருந்தார். இவரின் இந்த ஸ்டெர்லைட்டிற்கு எதிரான குரலுடன், பல்லாயிரக்கணக்கான குரல்களும் இணைந்திருந்தன.
இதன்போது இந்த குரல்களை ஒடுக்கும் வண்ணமாக வெடித்தன துப்பாக்கிகளில் இருந்து வெளிவந்த ரவைகள். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணத்தை தழுவிக் கொண்டனர். இன்னும் பலர் குற்றுயிராய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மரணத்தை அணைத்துக் கொண்டவர்களின் பட்டியலில் மாணவி ஸ்னோலினும் இணைந்து கொண்டார். சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அவர் உயிர் மண்ணைவிட்டு பிரிந்த நிலையில், அதன்பின் சரியாக 12 நாட்கள் ஸ்னோலின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதேவேளை, நேற்று காலை ஸ்னோலினின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்பின் 20 இற்கும் மேற்பட்ட கிருஸ்தவ குருமார்களின் பங்கேற்புடன் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஸ்னோலினின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.