அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேரிலன்ட் மாகாண ஆளுனர் பதவிக்கு, கிரிசாந்தி விக்னராஜா என்ற பெண் போட்டியிடுகிறார். அவரது சகோதரரான திரு எனப்படும் திருவேந்திரன், அதே மாகாணத்தின், பால்ரிமோர் நகர அரச சட்டவாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
கிரிசாந்தி முன்னர், வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவின் கொள்கை பணிப்பாளராக இருந்தவர்.
கிரிசாந்தியும் அவரது அண்ணன் திருவும், குழந்தைகளாக இருந்த போது, அவரது பெற்றோர், சிறிலங்காவில் இருந்து போரினால் இடம்பெயர்ந்து, பால்ரிமோர் நகரில் குடியேறினர்.
இவர்களின் பெற்றோர் பால்ரிமோர் நகர பாடசாலையில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரது சகோதரியான கிரிசாந்தி யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தார்.
இவர்கள் இருவரும் இப்போது மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.