‘காலா’ ரஜினி படம் மட்டுமல்ல; தமிழ் மண்ணிலிருந்து வெளிவரும் படம் என்பதனால் தான் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீமானிடம் தென்னிந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவரின் அந்தச் செவ்வியில்,
“அமெரிக்கா போன்ற வெளிநாட்டுப் படங்கள் எல்லாம் இந்தியா முழுமைக்கும் வெளியிடப்பட்டு சிறப்பாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. நாம் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே வரி என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பக்கத்து மாநிலத்தில் நமது திரைப்படங்களை வெளியிட்டு வர்த்தகம் செய்யமுடியவில்லை.
அரசியல் நிலைப்பாடுகள், கருத்து வேறுபாடுகள், மாநில எல்லைகள் இவை அனைத்தயும் தாண்டி மக்களிடையே ஒரு இணக்கமான உறவு தேவைப்படுகிறது. அதில்தான் நமக்குள் சிக்கல் ஏற்படுகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு என்பது உண்மையில் ஒரு பிரச்சினையே இல்லை. ஏனென்றால் ஆந்திராவும் கர்நாடகாவும் 60% நீரை எந்தச் சிக்கலுமின்றி பகிர்ந்துகொள்கின்றன.
ஆனால் நமக்குள் 16% நீரை பகிர்ந்துகொள்வதில் தான் இவ்வளவு சிக்கலும் ஏற்படுகிறது. இதற்காகவே திட்டமிட்டு ஒரு இனப்பகையை உருவாக்குவதாகவே நாங்கள் நினைக்கிறோம். எளிமையாகப் பேசி இணக்கமான ஒரு உறவை தமிழகம் மற்றும் கர்நாடக மக்களுக்கிடையே ஏற்படுத்த முடியாதா என்ன?
‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை என்பது போன்ற நிகழ்வுகள் மேலும் மேலும் வன்மத்தைக் கூட்டிக்கொண்டே போகும் நீண்டகாலமாகவே தமிழ்த் திரைப்படங்களை கரநாடகாவில் திரையிடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வாழும் ஒன்றரைக்கோடி தமிழர்கள் மட்டுமல்லாது எல்லையோரப் பகுதிகளில் வாழும் கன்னடர்கள் கூட தமிழ்த் திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
எனவே ‘காலா’ திரைப்படத்தை கர்நாடாவில் வெளியிட தடை விதித்திருப்பது பெரிய இழப்புதான். சத்தியராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கும் இதேநிலை ஏற்பட்டபோதும் நாங்கள் இதே உணர்வில் தான் இருந்தோம். அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் போன்றோர் ‘காலா’ திரைப்படத்திற்கு குரல் கொடுக்கிறார்;
ஆனால் சத்தியராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு ஏன் இதேபோல் குரல்கொடுக்கவில்லை? அவர் நடுநிலையாகத் தானே பேசியிருக்கவேண்டும்?
இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டும் எதிர்த்து குரல் கொடுப்பதா? இது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம்!
‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா..? நாளை கமல் படத்திற்கோ? விஜய் படத்திற்கோ? என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் இதே நிலைப்பாடுதான் எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார்.