நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இதைச் செய்திடுங்கள்!

இந்த பிரபஞ்சம் மிக பிரம்மாண்டமானது, காலத்தைக் கடந்து நிற்பது. தன்னுள் பல அற்புதங்களைக் கொண்டது. அதைக் கண்டு வியப்பதற்கே, மனிதர்கள் நமக்கு ஒரு வாழ்நாள் பத்தாது. ஆனால் நம்மில் பலர் ஒன்றுமேயில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி, நம் மனதை ஆயிரக்கணக்கான கவலைகளால் நிரப்பிக்கொண்டு, மன அமைதி மற்றும் மன மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறோம்.

அப்படி மன மகிழ்ச்சியை இழந்து தவிற்பவர்களுக்கான மந்திரம் தான் இது. இதை ஜெபிப்பதன் மூலம் நாமும் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

மந்திரம் :

“ஓம் லோக்க ஸமஸ்தா சுகினோ பவந்தூ”

பொருள் :

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் பல சுகங்களைப் பெற்று, மகிழ்வுடன் வாழ, இப்பிரபஞ்சத்தை நான் வேண்டுகிறேன் என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை தினமும் காலை உறக்கத்திலிருந்து எழுந்தவுடன், கிழக்கு திசையைப் பார்த்து நின்றுகொண்டு, கண்களை மூடி இம்மந்திரத்தை உங்களால் முடிந்த அளவுக்கு 9, 27, 108 போன்ற ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் கூறி, உங்கள் நாளை தொடங்க வேண்டும்.

இதை செய்த பின்பு, அன்றைய தினம் முழுவதும் எதிர்மறையான எண்ணங்கள், கவலைகள் ஏற்படாமல் நாள் முழுவதும் உற்சாகத்தோடும், ஒரு வித மன மகிழ்வுடனும் இருப்பதை உணர்வீர்கள். மேலும் உங்களின் இந்த நேர்மறையான ஆற்றல், அன்று உங்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து மனிதர்கள் மற்றும் உயிர்களுக்கும் பரவி சிறந்த ஒரு சூழலை உண்டாக்கும்.