இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒன்றரை வயதுக் குழந்தையை இளைஞரிடம் ஒப்படைத்த சென்னைப் பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
திருப்பதியில் இளம்பெண் ஒருவர், ஒன்றரை வயது ஆண் குழந்தையை இளைஞர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மாயமாகியுள்ளார்.
குறித்த இளம்பெண்ணைத் தேடி தொடர்புடைய இளைஞர் சென்னை சென்று காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்ப்டைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரைச் சேர்ந்த நிதின் என்பவர் திருப்பதி சென்றுள்ளார்.
அங்கே இளம்பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையின் சிகிச்சைக்காக திருப்பதிக்கு வந்ததாகவும், சென்னைக்குத் திரும்பிச் செல்ல பணமில்லை என்று கண்ணீர் மல்க நிதினிடம் கூறியுள்ளார்.
இதனால், அந்த இளம்பெண்மீது பரிதாபப்பட்டு உதவி செய்துள்ளார் நிதின். திருப்பதியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட பேருந்தில் நிதினும், கைக்குழந்தையுடன் அந்தப் பெண்ணும் ஏறியுள்ளார்.
இந்த நிலையில், தாம் கழிவறைக்கு செல்வதாகவும், குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் குறித்த பெண் பின்னர் திரும்பி வரவில்லை எனவும் நிதின் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் நள்ளிரவில் குழந்தை அழுத போது சமாதானப்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும், அந்த இரவை தன்னால் மறக்க முடியாது எனவும் நிதின் தெரிவித்துள்ளார்.