புதிய வரிக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தவறாக புரிந்துகொண்டதன் காரணமாக தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்களின் விற்பனையின்போது 14 சதவீத நிறுத்திவைத்தல் வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையினை சரிசெய்து அந்த வரியை அறவிடாதிருப்பதற்கு உரிய நிறுவனத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனிடையே, புதிய வரிக்கொள்கை காரணமாக தேசிய சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகக்கலை உள்ளிட்ட ஏனைய கலைத்துறைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாயின் உரிய நிறுவனத்துடன், கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சினிமா, நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவினருடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை காரணமாக கலைத்துறை சார்ந்த தயாரிப்புக்களை மேற்கொள்வதில் தாம் எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது இவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நிதி அமைச்சருடன், கலந்துரையாடி அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு சினிமாத்துறை, நாடகக்கலை உள்ளிட்ட ஏனைய கலைத்துறைகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதுடன், அவற்றை சரிவர நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தேசிய சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகக் கலையினை பாதுகாப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தேசிய சினிமா மற்றும் நாடகக் கலையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளைக் கண்டறிவதற்கு அத்துறைகளைச் சேர்ந்த உள்ள சகல பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனைகளுக்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இச்செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரித்து அறிந்த ஜனாதிபதி, அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான தேவையை வலியுறுத்தினார்.