பெண்களின் பிரசவ தொப்பையை குறைக்கும் வழிகள்!

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும்.

பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்தி விடும். தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் பெண்கள் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது. ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்ற பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகி விடும்.