பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் தன் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர். நீட் தேர்வில் கிடைத்த வெறும் 39 மதிப்பெண்கள், அவரை நிலைகுலையச் செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளடங்கி அமைந்திருக்கிறது பெருவளூர் ஊராட்சி. சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்ட சற்று பெரிய ஊர்.

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல ஊரும் காலனியும் தனித்தனியே இருக்கும் இந்த ஊரில் ஒரு எளிய ஆதிதிராவிட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரதீபா.

கடந்த ஜூன் நான்காம் தேதியன்று மாலை சுமார் ஏழரை மணியளவில் “அம்முவை” அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் அமரவைத்துக் கூட்டிச் செல்வதைப் பார்த்த எதிர் வீட்டுக்காரரான ஜெயந்தி, பெரிதாக ஏதும் யோசிக்கவில்லை. ஆனால், இரவு சுமார் 11 மணியளவில் பிரதீபாவின் மரணச் செய்தி வந்துசேர்ந்தபோது ஜெயந்தி மட்டுமல்ல ஊரே அதிர்ச்சியில் உறைந்து போனது.

_101896002_35718b11-b603-4790-b011-21b0d615b615  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101896002 35718b11 b603 4790 b011 21b0d615b615பிரதீபாவின் தந்தை சண்முகம்- தாய் அமுதா

பள்ளிக்கூடத்தில்தான் பிரதீபான்னு பேரு. நாங்க எல்லாம் அம்முன்னுதான் கூப்பிடுவோம். வெளியில் ரொம்பவும் அமைதியான பெண். ஆனால், வீட்டிற்குள் ரொம்பவும் கலகலப்பாக இருப்பாள்.

எலி மருத்தை குடித்த பெண்ணைத்தான் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள் என்று அப்போது தெரியாமல் போச்சே” என்று புலம்புகிறார் எதிர் வீட்டுக்காரரான ஜெயந்தி ஏகாம்பரம்.

பெருவளூரில் வசிக்கும் கூலித் தொழிலாளியான சண்முகம் – அமுதா தம்பதியின் மூன்றாவது மகள்தான் பிரதீபா. சண்முகம் கட்டட மேஸ்திரி. தாய் அமுதா வீட்டைப் பார்த்துக்கொள்வதோடு, மாடு மேய்க்கவும் செல்வார். நீண்ட காலமாக குடிசையில் வசித்தவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்புதான் அரசின் உதவியால் ஒரு சிறிய வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.

_101895769_52db06e6-524c-419f-8f28-55dd676de472  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895769 52db06e6 524c 419f 8f28 55dd676de472பிரதீபாவின் வீடு

சண்முகத்திற்கு பிரதீபா தவிர, உமாப்ரியா, பிரவீண் ராஜ் என மேலும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். உமாப்ரியா வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் எம்சிஏ படிக்கிறார்.

பிரவீண் ராஜ் மயிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர்களுக்குப் பிறகு, 1999 ஜூலை 27ஆம் தேதியன்று பிறந்தவர்தான் பிரதீபா.

பத்தாம் வகுப்பு வரை அதே ஊரிலேயே உள்ள பெருவளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில்தான் பிரதீபா படித்தார்.

பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களை எடுத்தையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உதவியால், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடமான ஏகேடி உயர்நிலைப் பள்ளியில் 11வது, 12வது வகுப்புகளை முடித்தார்.

2016ஆம் ஆண்டில் 1125 மதிப்பெண்களுடன் பன்னிரெண்டாம் வகுப்பில் தேறிய பிரதீபாவுக்கு, தன் மதிப்பெண்கள் குறித்து ஏமாற்றம்தான். அந்த ஆண்டில் நீட் இல்லாவிட்டாலும் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில், சுயநிதிப் பிரிவில்தான் இடம் கிடைத்தது. இதனால், அடுத்த ஆண்டு முயற்சிக்க முடிவுசெய்தார் பிரதீபா. ஆனால், அடுத்த ஆண்டில், அதாவது கடந்த ஆண்டில் (2017) நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

_101896004_521194fc-b695-4f62-8c2a-9f51be21dffc  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101896004 521194fc b695 4f62 8c2a 9f51be21dffc

“அதுக்கெல்லாம் அவ ஒன்னும் கவலைப்படலை. எப்படியும் இந்தப் பரிட்சையை பாஸ் பண்ணீறலாம்ன்னுதான் நினைச்சா. யோசிக்காம தொடர்ந்து படிச்சா” என்கிறார் சண்முகம்.

2017ஆம் ஆண்டில் நீட் தேர்வை ஆங்கிலத்திலேயே எழுதிய பிரதீபா, தேர்ச்சியடைந்தாலும் 155 மதிப்பெண்களையே பெற்றார். ஆகவே அந்த வருடமும் சுயநிதிப் பிரிவில்தான் மருத்துவம் கிடைத்தது. இதனால், இந்த ஆண்டும் (2018) முயற்சிக்க விரும்பினார் பிரதீபா.

பிரதீபாவின் முயற்சிக்கு அரசின் ஆதரவும் கிடைத்தது. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுவந்த நீட் பயிற்சி வகுப்பில், தமிழக அரசின் நிதியுதவியுடன் பயிற்சி பெற்ற பிரதீபா, இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதினார். ஆனால், முடிவுகள் வெளியானபோது நொறுங்கிப் போனார் அவர்.

_101895771_adbf4e27-f695-4c62-9fed-6ef2ae04e25a  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895771 adbf4e27 f695 4c62 9fed 6ef2ae04e25aபிரதீபாவின் தந்தை சண்முகத்திற்கு ஆறுதல் கூறும் ஸ்டாலின்

நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்பதோடு, வெறும் 39 மதிப்பெண்களே அவருக்குக் கிடைத்திருந்தன. “நீட் ரிசல்ட் இன்னைக்குத்தான் (ஜூன் 5ஆம் தேதி) வரும்னு சொல்லியிருந்தாங்க.

ஆனா திடீர்னு நேத்தே வந்திருச்சு. அவங்க அம்மாவுக்கும் தெரியாது. தான் ஃபெயிலாயிட்டோம்னு தெரிஞ்சவுடனே, வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டாள் பிரதீபா” என்கிறார் சண்முகம்.

தாய் அமுதா வீட்டிலேயே இருந்தாலும் அவர் அதைக் கவனிக்கவில்லை. மாலையில் வீடு திரும்பிய சண்முகம்தான் பிரதீபா வாந்தி எடுப்பதைப் பார்த்து விசாரித்த பிறகே, அவர் விஷம் குடித்திருப்பது தெரிந்தது.

உடனடியாக தன் இருசக்கர வாகனத்தில் மனைவியையும் மகளையும் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள சேத்துபட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார் சண்முகம். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிரதீபா, உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டார்.

_101895416_d29d3049-7b1c-4d5b-8e68-11bb50b9b674  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895416 d29d3049 7b1c 4d5b 8e68 11bb50b9b674பிரதீபாவுடன் படித்த தோழிகள்

ஆனால், திருவண்ணாமலை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரதீபாவின் உயிர் பிரிந்தது. திருவண்ணாமலை மருத்துவமனையில் தன் மகள் இறந்துபோனதைக் கேட்ட அமுதா அதிர்ச்சியில் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழ, அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் தற்போது அவருக்கு குடும்பத்தினரையே அடையாளம் தெரியவில்லை.

திருவண்ணாமலையிலிருந்து பெருவளூருக்கு மகளின் சடலம் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்ட நிலையிலும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அமுதா. “என்னையே அடையாளம் தெரியலை. ஒரு பொட்டுக் கண்ணீர்விடலை” என்கிறார் சண்முகம்.

_101895773_5073c767-e9e3-4c66-8a31-e40b1e706e64  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895773 5073c767 e9e3 4c66 8a31 e40b1e706e64பிரதீபா படித்த பள்ளி

பிரதீபாவின் மருத்துவக் கனவு முழுக்க முழுக்க அவரது மதிப்பெண்களிலிருந்து உருவானது. “தான் நன்றாகப் படிப்பதால் தனக்கு நிச்சயம் மருத்துவம் கிடைத்துவிடும் என்று நினைத்தாள் பிரதீபா” என்கிறார் பிரதீபாவின் சகோதரி உமா. “‘டாக்டருக்குப் படிக்கனும்ங்கிறது, சின்ன வயதிலேயே வந்த ஆசைன்னு சொல்ல முடியாது.

பத்தாம் வகுப்பில் அவள் 500க்கு 490 மதிப்பெண்களை எடுத்து திண்டிவனம் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தாள். அப்போது பிறந்த ஆசைதான் அது” என்கிறார் சண்முகம்.

இவ்வளவு மதிப்பெண்களை எடுத்திருக்கும் பிரதீபா, வீட்டில் மிகவும் சுட்டியான பெண். “அவளுக்கு சினிமா பார்க்க பிடிக்கும் சார். பரிட்சைக்குக்கூட ராத்திரியெல்லாம் கண் முழிச்சுப் படிக்கும் பழக்கம் அவளுக்குக் கிடையாது. சாதாரணமாத்தான் படிச்சு இவ்வளவு மார்க் எடுத்தா” என்கிறார் சண்முகம்.

இந்த ஆண்டு வேலூரில் நீட் தேர்வை எழுதிய பிரதீபா, ஆங்கிலத்தில் இருந்து பல கேள்விகள் தமிழில் மாற்றப்படும்போது தவறுகள் இருந்ததை கண்டறிந்து சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியதாகச் சொல்கிறார் தந்தை சண்முகம். “கண்டிப்பாக ஐநூறு மார்க் வரும்பா என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். ஆனால், 39 மதிப்பெண்கள் மட்டுமே வந்ததை அவளால் தாங்கவே முடியவில்லை” என்கிறார் சண்முகம்.

_101895775_8329fa74-3d32-4835-b72b-deead9b5b596  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895775 8329fa74 3d32 4835 b72b deead9b5b596பிரதீபாவின் அண்ணன் பிரவீன் ராஜ், அம்மா அமுதா

அதே காலனியில் உள்ள பிரதீபாவின் தோழிகளில் பலரது முகத்தில் நம்ப முடியாத அதிர்ச்சி இருக்கிறது. “பத்தாப்பு வரைக்கும்தான் எங்களோட படிச்சா. கலகலப்பா இருப்பா. அதே நேரம் படிப்பிலும் கவனமா இருப்பா. பள்ளிக்கூட பிரார்த்தனையில் அவள்தான் மேடை மீது ஏறி திருக்குறள் சொல்லுவா” என்கிறார்கள் அவர்கள்.

வீட்டிலோ, சகோதர், சகோதரிகளிடமோ, தோழிகளிடமோ படிப்பு குறித்த ஆலோசனைகளை கேட்பவரில்லை பிரதீபா. “நானும் என் தம்பியும் அவளோட ஃப்ரண்ட் மாதிரிதான் பழகுவோம்.

ஆனாலும் என்ன படிப்பது என்பதைப் பற்றியெல்லாம் டீச்சர்ஸ்ட்ட மட்டும்தான் பேசுவா” என்கிறார் அவரது சகோதரி உமா (இவரும் பத்தாம் வகுப்பில் 444 மதிப்பெண்களைப் பெற்றவர்தான்). சகோதரரான பிரவீண் ராஜ் பேசும் நிலையிலேயே இல்லை.

_101896006_47900e05-0f2c-4168-b3a5-64978d23c54f  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101896006 47900e05 0f2c 4168 b3a5 64978d23c54fபிரதீபாவின் வீடு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் சடலம் வைக்கப்பட்டிருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும், நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

_101895764_fb490e35-7835-41de-9ac7-5b97dd533ef4  பிரதீபா: பிரகாசித்து அணைந்த சுடர் 101895764 fb490e35 7835 41de 9ac7 5b97dd533ef4 e1528282890182அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையைத் தவிர்த்த மற்ற இரு கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளது.

மாநிலம் எங்குமிருந்தும் நீட் எதிர்ப்பாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பெருவளூர் வந்து பிரதீபாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை நீட் தேர்வின் காரணமாக கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த அனிதாவைப் போலவே பிரதீபாவும் நீட் எதிர்ப்பிற்கான துருவ நட்சத்திரம்.

பிரதீபாவின் குடும்பத்தைப் பொருத்தவரை பிரதீபா பிரகாசித்து, அணைந்த எரி நட்சத்திரம்.