மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்கு மூலம்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்யவுள்ளனர்.ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்படவுள்ளது.எதிர்வரும் நாட்களில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கீத் நொயார் கடத்தல் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளிப்பதற்கு திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் ஏற்கனவே கோரியுள்ளதாக பொலிஸ் தலையகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதன் போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மஹிந்த ராஜபக்சவிடம் சில முக்கிய விடயங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயார் கடத்தப்பட்ட போது தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இது பற்றி அறிவித்து நொயாரின் உயிரைக் காப்பாற்றியதாக கரு ஜயசூரிய, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.