ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கத்தின் பயணம் தொடரும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் மாதுளுவாவே தேரரின் பிறந்த தினத்தில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.தான் ஆட்சியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும் என்றும், நூறு நாள் வேலைத்திட்டமானது மடத்தனமானது என்றும் அந்த திட்டத்தை யாரு தயாரித்தது என்று தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.ஜனாதிபதியின் அன்றைய உரையினையடுத்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஜனாதிபதியின் அந்த உரை தொடர்பில் யாரும் பதில் கருத்து வெளியிட வேண்டாம் என்றும் தனது கட்சி உறுப்பினருக்கு ரணில் தடை போட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் காலை விருந்து நிகழ்வில் பேசிய ரணில்,ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும், மக்களின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கம் , 2020 ஓகஸ்ட் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்கூட்டு அரசின் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து நாம் எமது கடமையை நிறைவு செய்வோம்.
நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.