யாழில் கடந்த 2016ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டும், விபத்தில் சிக்கியும் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பணித்துள்ளது.
அத்துடன், மற்றைய 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்டமா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, யாழ். கொக்குவில் குளப்பிட்டியில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழ மாணவன் உயிரிழந்ததுடன், மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்திருந்தார்.
விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸாரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்.மேல் நீதிமன்றால் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு வரும் 26ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்கிலுள்ள 5 சந்தேகநபர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பொலிஸாரை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளது.