லண்டன் மணமகன் என கூறி பெண்ணை ஏமாற்றிய குடும்பம்….

சென்னை ராயபுரத்தில் லண்டன் மாப்பிள்ளை எனக் கூறி உணவக அதிபரின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராயபுரத்தைச் சேர்ந்த உணவக அதிபரான சையது இப்ராஹிம், தனது மூன்றாவது மகளான சோபியா பர்வீனுக்கு திருமணம் செய்துவைக்க வரன் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை மண்ணடியில் வசித்து வரும் அமானுல்லாகான் என்பவர் தனது மகன் முகம்மது அஸ்லம் MBA முடித்துவிட்டு லண்டனில் வேலை பார்ப்பதாகக் கூறி பெண் கேட்டுள்ளார். ஒரே ஊர்க்காரர் என்பதால் அவர் கூறியதை நம்பி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மணமகன் வீட்டிலேயே பூ வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் மணமகன் வீட்டார் திருமணத்துக்கு பெண் வீட்டாரை அவசரப்படுத்தியாகத் தெரிகிறது. இதில் சந்தேகமடைந்த பெண் வீட்டார், அதன் பிறகுதான் மணமகன் முகம்மது அஸ்லம் குறித்து வெளி நபர்களிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். விசாரணையில் அஸ்லம் 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவன் என்பதும் லண்டனில் கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்ததாகக் கூறுகின்றனர்.

இதனையடுத்து உஷாரான பெண்ணின் குடும்பத்தினர், திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஸ்லம் குடும்பத்தினர், 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண் குடும்பத்தாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால், பூ வைக்கும் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் அவர்கள் மிரட்டியதாக பெண் வீட்டார் கூறுகின்றனர்.

மணமகன் வீட்டாரின் இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், உடனடியாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக முகம்மது அஸ்லமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.