இந்தியாவில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணொருவரை, அவரது காதலர் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். குறித்த இளைஞருக்கு துபாயில் வேலை கிடைக்கவே அவர் துபாய் சென்றுவிட்டார்.
அதேபோல், இளம்பெண்ணுக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது. அங்கு வேறு ஒரு இளைஞருடன் குறித்த பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது.
அச்சமயம், அந்த இளைஞர் வேலை மாற்றுதலால் குஜராத் சென்றுவிட்டார். ஆனால், இவர்கள் காதல் தொடர்ந்தது. இந்நிலையில், துபாயில் இருந்த முதல் காதலன் பெங்களூருக்கு விரைந்தார்.
அவர் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதும், அதற்கு அப்பெண்ணும் சம்மதித்தார்.
அதனைத் தொடர்ந்து, இருவரது குடும்பங்களும் இணைந்து பேசி திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தனர்.
இந்த விடயம், நண்பர்களின் மூலமாக குஜராத்தில் இருந்த இரண்டாவது காதலருக்கு தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அவர், கொச்சியில் திருமணத்திற்கு ஆடைகள் வாங்க குடும்பத்தாருடன் சென்றிருந்த அவரது காதலியை, தனது நண்பர்கள் உதவியுடன் கடத்த முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட குறித்த பெண்ணின் வருங்கால கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அதனை தடுக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கவனித்த போக்குவரத்து காவல்துறையினர், அவர்களை விசாரித்தனர்.
அதன் பின்னர், குறித்த இளம்பெண்ணை கடத்த முயன்றதாக இரண்டாவது காதலரும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.