`இதனால்தான் ‘காலா’ படம் பார்க்கப் போனேன்’ – தமிழிசை சொன்ன அடடே காரணம்!

‘திரைப்படங்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது’ என ‘காலா’ படம் பார்த்த பின் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. கர்நாடகாவிலும் பிரச்னை சரிசெய்யப்பட்டு இன்று மதியம் படம் வெளியாகிவிட்டது. இதனால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே, பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று ‘காலா’ படத்தைப் பார்த்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில், படம் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களது சகோதரர்கள் இணைந்து திரைப்படத்திற்கு செல்வோம் எனக் கூறியதால் நானும் வந்தேன். இந்தப் படம் சமூகக் கருத்துள்ள படம் எனக் கூறியதால் வந்தேன். திரைப்படங்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.

யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். திரைப்படத்தை அரசியலுடன் இணைத்துப் பார்த்தால் வன்முறைதான் ஏற்படும். அனைவரது வாழ்க்கையும் தற்போது வண்ணமயமாகிவிட்டன. ரஜினி திரைப்பட நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். ஏற்கெனவே, பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். வன்முறையில் ஈடுபடுபவர்களை மக்கள் எனக் கூற முடியாது. அவ்வாறு ரஜினி கூறியது அவருடைய சொந்தக் கருத்து. மக்களை நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்றார்.