நகரத்தை உருவாக்கி, அதன் மையத்தில் வாழும்.. ஆனால் நகரத்தின் சவுகரியங்கள் கிடைக்காத `நகர்ப்புற ஏழை’ மக்களின் வாழ்வியலை கொண்டாட்டமாகவும், நம்மில் பெரும்பான்மையானவர்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்துபோகும் ஒடுக்கப்பட்ட `கறுப்பர்’களின் அரசியலை வலியோடும் பதிவு செய்திருக்கும் படம்தான் `காலா’.
தாராவியின் ராஜாதி ராஜா காலா சேட் என்கிற கரிகாலன். இந்தக் கறுப்புச் சட்டைக்காரர் சொல்லாமல் அங்கே அணுவும் அசையாது.
மொத்தக் குடிசைப் பகுதியையும் சுத்தமாக்கும் `ப்யூர் மும்பை’ திட்டத்தோடு அங்கே முகாமிடுகிறது வில்லன் நானா படேகர் அண்ட் கோ. இவர்களின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு விரட்டுகிறது காலாவின் காலாட்படை. செய்வதறியாது நானா படேகர் கையைப் பிசையும்போது வந்து இறங்குகிறார்
ஹியூமா குரேஷி. பிரேசிலின் ரியோ நகரத்துக் குடிசைப் பகுதிகளை மேம்படுத்திய கையோடு தான் பிறந்து வளர்ந்த தாராவியையும் முன்னேற்ற கலர்ஃபுல் கனவுகளோடு வருகிறார் காலாவின் முன்னாள் காதலியான ஹியூமா!
சூழ்ச்சியால் அவரைக் கையில் போட்டுக்கொண்டு திரும்பவும் தாராவி மண்ணை அபகரிக்க முயற்சி செய்கிறார் நானா. அவரின் திட்டத்தை காலா சேட் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் கதை.
கம்பீரக் கரிகாலனாக ரஜினி. முதல் காட்சியில் ஜீப்பில் நெஞ்சை நிமிர்த்தி வரும்போதே எமன் உருவகம் நமக்குள் வந்துவிடுகிறது. அந்த அதிர்வு படம் முழுக்கவே நமக்குள் பயணிக்கிறது.
முதல் காட்சியில் முறைப்பும் விறைப்புமாக இருந்துவிட்டு அடுத்த காட்சியிலேயே ஈஸ்வரி ராவிடம் பம்மிப் பதுங்குவதில் வெளிப்படுகிறார் காலாவுக்குள் இருக்கும் க்ளாஸிக் நடிகன்.
ஈஸ்வரி ராவிடம் ஐஸ் பாறையாக உருகலும் முனகலுமாக இருக்கும் ரஜினி ஹியூமாவின் முன் பனிக்கூழாக நெகிழ்ந்து உடைகிறார். அவரின் ரகளை நடிப்பை கடைசியாக `சிவாஜி’ படத்தில் பார்த்தது.
பத்து ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு பத்து நிமிட காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் `கள்ளு’ குடித்த ரஜினி. சாவு பயத்தை படரவிட்டுவிட்டு கிளம்பும் வில்லனிடம், `நான் உன்ன கிளம்பச் சொல்லலையே’ என கெத்தாகச் சொல்லும் ரஜினி… வின்ட்டேஜ் ரஜினி.
ஆக, ஸ்டைல், ஆக்ஷன், கெத்து, காமெடி, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் ஃபார்ம் அவுட்டே ஆகாத சூப்பர்ஸ்டார் நான் என்பதை நிரூபித்திருக்கிறார் ரஜினி.
ஈஸ்வரி ராவ் – ராவணனுக்கு ஏற்ற ராட்சஷி. அறிமுகமாகும் முதல் காட்சியில் மூச்சு முட்டுமளவுக்கு வசனங்கள். அதுவும் வேறு வேறு கேரக்டர்களோடு.
அதை சிங்கிள் ஷாட்டில் அனாயசமாக ஓகே செய்யுமளவுக்கு நடிப்பு ராட்சஷி. ஊரையே கட்டி மேய்க்கும் தாதாவைத் தன் வீட்டோடு சேர்த்துக் கட்டி மேய்க்கும் பாசக்கார செல்வி.
`நீங்க மட்டும்தான் முன்னாள் காதலியை பார்க்கப் போவீங்களா? நானும் திருநெல்வேலி போறேன். என்னையும்தான் ஒருத்தன் லவ் பண்ணான்’ எனப் பொய்க்கோபம் கொள்ளும்போது தியேட்டரே அதிர்கிறது.
`அடங்கப்பா, ஒரு லவ் யூ சொன்னாதான் என்னாவாம்?’ எனக் காதலை கேட்டுக் கேட்டு வாங்கி ரசிக்கும் குழந்தை. படம் நகர நகர நாமும் காலா குடும்பத்தில் ஒருவராக மாறுவதற்கு முதல் காரணம் இந்தத் தாயம்மாதான்.
சரீனாவாக ஹியூமா குரேஷி – வழக்கமாக நடிப்பில் வெளுத்து வாங்கும் இந்த வெள்ளாவி தேவதைக்குக் காலாவில் வெளி குறைவுதான். ஆனால், தன் திறமையை நம்பி வருபவர்களை ஏமாற்றாமல் ரஜினியை உணவகத்தில் சந்திக்கும் காட்சியில் செஞ்சுரி போடுகிறார்!
கடந்தகாலக் காதலை கண்களில், விரலசைவில், குறுகுறுப்பான உடல்மொழியில் இவரும் ரஜினியும் மாறி மாறி பரிமாறிக்கொள்ளும்போது நம் வாழ்க்கையிலிருந்த சரீனாவும், கரிகாலனும் வந்துபோகிறார்கள்.
ஹரிநாத் என்ற ஹரிதாதாவாக நானா படேகர் – நானா இருக்கும்போது வேறு யார் ஃப்ரேமில் இருந்தாலும் அது நானாவின் ஃப்ரேம்தான். வெறும் பார்வையிலேயே நம்மை நடுங்க வைக்கிறார்.
வீட்டுக்கு வரும் ரஜினியை ஆறுதலாக அணைத்து, அவர் சொல்லும் அந்த விஷயம்… வேற லெவல் வில்லத்தனம். ராவணனை அழிக்கத் துடிக்கும் ராமர் வேஷத்துக்குப் பக்கா பொருத்தம்.
ரஜினியின் குடிகாரத் தோழனாக சமுத்திரக்கனி! ஒரு சாயலில் பார்த்தால் `மெட்ராஸ்’ ஜானியின் நீட்சி! வழக்கமான போதனைகளை விட்டுவிட்டு காமெடி ஒன்லைனர்களால் அதிரடிக்கிறார்.
ரஜினியின் தளபதியாக, வீட்டைக் காத்து நிற்கும் மதுரைவீரனாக திலீபன். கண்ணைக் காட்டியவுடன் பாயும் சிறுத்தையாகக் கவனம் ஈர்க்கிறார். சிவப்புச் சட்டை லெனினாக வரும் மணிகண்டனுக்கு இது முக்கியமான படம். தன் கேரக்டரின் கனம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.
ஒடிசலான தேகம், ஓங்கிய குரல், பயமறியா பார்வை என காம்ரேட் ரோலுக்காகவே செய்து வைத்ததைப் போல இருக்கிறார் அஞ்சலி பாட்டீல். சம்பத், அருள்தாஸ், ஷாயாஜி சிண்டே, அருந்ததி என நிறைய நடிகர்கள், சின்ன சின்ன கேரக்டர்களில் வந்தாலும் தங்களின் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
ரிலீஸுக்கு முன்பே பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். `பின்னணி இசையிலும் பின்றேன் பாரு’ என இறங்கியடித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ரஜினிக்கான தீம் ஒலிக்கும்போதெல்லாம் நமக்குள்ளும் எனர்ஜி தொற்றிக்கொள்கிறது.
சில இடங்களில் அவர் விடும் சைலன்ஸ்…நமக்குள் பரபரப்பை உண்டாக்குகிறது. தாராவியை இத்தனை அழகாகக் காட்டமுடியும் என நொடிக்கு நொடி உணர்த்துகிறார் ஒளிப்பதிவாளர் முரளி.
கறுப்பும், சிவப்பும், நீலமுமான வண்ண விளையாட்டில் ஓங்கிப் பறப்பது முரளியின் மூவர்ணக் கொடிதான். ஶ்ரீகர் பிரசாத்தின் கத்திரி… கச்சிதம். `இது செட்தான்’ என முன்பே அறிவித்துவிட்டார்கள்.
ஆனால் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கமே வந்து சத்தியம் செய்தாலும் அதை நம்பமுடியாது! சுவரில் மினுங்கும் சார்ஜர் முதல் காரை பெயர்ந்த சுவர்கள் வரை அவ்வளவு கச்சிதம். விருதுகள் குவிப்பீர்கள் தோழர்!
இப்போது படத்தின் மற்றொரு ஹீரோவான ரஞ்சித் பற்றி! ரஜினியிடம் என்ன பலம், என்னவெல்லாம் வாங்கலாம் என்பதை அறிந்து கச்சிதமாக திரைக்கதை அமைத்ததிலேயே அவருக்குப் பாதி வெற்றி கிடைத்துவிட்டது.
நில அரசியல் என்னும் மையப்புள்ளியை விட்டு எந்த இடத்திலும் விலகாமல் பயணிக்கும் நேர்த்தியான திரைக்கதை. அதிகாரத்துகு எதிரான அரசியல் பேசவேண்டும், அதேசமயம் ரஜினிக்கான மாஸ் ஃபேக்டரும் இருக்கவேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
பலன் திரையில் தெரிகிறது. குறிப்பாக, அந்த வித்தியாச க்ளைமாக்ஸ் – பல ஆண்டுகளுக்குப் பேசப்படும். நித்தமும் போராட்டம் என இருக்கும் சமகாலச் சூழலை அப்படியே பொருத்திக் கொள்ள முடிவது படத்தின் பெரிய ப்ளஸ்.
மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித் மூவரின் வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம். `நான் நீ முன்னாடி பார்த்த சரீனா இல்ல, உனக்கு உன் நினைவுகள்ல இருக்குற சரீனா போதும்’ என ஹியூமா விலகும் காட்சி நெஞ்சைத் தொடும் டச்! `என்னோட நிலத்தைப் பறிக்குறதுதான் உன் கடவுளோட வேலைன்னா உன் கடவுளையும் விடமாட்டேன்’ என்ற வசனம் மதத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட ஒருவனின் கோபம்.
`சமத்துவம்னா கையைக் கொடு, கால்ல விழ வைக்காதே’ எனப் போகிற போக்கில் போலியவாதிகளின் பொட்டில் அறையும் வசனங்களும் எக்கச்சக்கம்.
படத்தில் நானா தன்னை தேசபக்தர் எனச் சொல்லிக்கொள்கிறார். `தூய்மையான மும்பையே என் கனவு’ என அறிவிக்கிறார். `என் மனதின் குரல் இது’ என உரையாடுகிறார்.
`என் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்’ எனக் குற்றம் சாட்டுகிறார். `கறுப்பு என் கண்ணை உறுத்துது’ எனச் சலித்துக்கொள்கிறார். உங்களுக்கு யாரேனும் நினைவுக்கு வருகிறார்களா? போதாக்குறைக்கு ஒரு காட்சியில் சமுத்திரக்கனி வேறு, `ஹே காக்கி டவுசரு.. ஒழுங்கா ஓடிப் போய்ரு’ என விரட்டுகிறார்.
படத்தில் எக்கச்சக்க குறியீடுகள். நண்பர்களோடு ரஜினி கலந்தாலோசிக்கும் இடமாக ஒரு புத்த விகாரம் இருப்பது, வீட்டுக்கு வெளியே உள்ள சிறுதெய்வ சிலை, `மூதாதையர்களோட சொல்… என்னோட ஆணை’ என்ற ரஜினி பன்ச்…, ரஜினியின் வீட்டில் நானா தண்ணீர் அருந்த மறுப்பது, இரண்டாம் பாதியில் நானா வீட்டில் அதே காட்சியில் தண்ணீர் குடித்த கையோடு, `ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவேணாம், வணக்கம் போதும்’ என படேகர் பேத்தியிடம் சொல்வது, `மனு’ ரியாலிட்டி ஹோம்ஸ், `தண்டகாரன்யம்’ நகர், டிவி செய்தி ஸ்க்ரோலில் ஓடும் `ஆதிச்சநல்லூர் ஆதித்தமிழரின் தொன்மப்படிமங்கள்’ கண்டெடுப்புச் செய்தி, நிறைய காட்சிகளில் அம்பேத்கர், புத்தர் படங்கள், பெரியார் சிலை… தான் யாருக்கான அரசியல் பேசுகிறோம், யாருக்கெதிராகப் பேசுகிறோம் என்பதை படத்துக்குப் படம் மேலும்மேலும் உறுதியாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் ரஞ்சித்.
அதிலும் பின்னணியில் ராம கதாகாலட்சேபம் நடக்க, இங்கே கறுப்புச் சட்டையில் ராவணனாக ரஜினியும் அவர் மக்களும் சண்டை போடும் இடம் – க்ளாசிக் உருவகம்.
கறுப்பு.. உழைப்போட வண்ணம்’- அது மட்டுமல்ல, அது அதிகாரத்துக்கு எதிரான கலகக்குரல், ஒடுக்கப்பட்டவர்களை ஓரணியில் திரள வைக்கும் கொடி, அடிப்படைவாதத்துக்கு எதிராக நிற்கும் உறுதியான அரசியல் குறியீடு’ எனப் படம் முழுக்க காலா காதலை கொண்டாடியிருக்கிறார் ரஞ்சித். இராவணனின் ஒரு தலை ரஜினியென்றால், மற்ற ஒன்பது தலைகளும் ரஞ்சித்தான்..!
படத்தின் நீளம் ஒரு மைனஸ். இதனாலேயே ஒருசில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது. ஒரே ஏரியாவில் கேமரா சுற்றி சுற்றி வருவதால் பார்வையாளர்களுக்குச் சலிப்பு தட்டுவதையும் தவிர்ப்பதற்கில்லை.
முதல் பாதி முழுக்க பயங்கர ஹைப் ஏற்றப்படும் நானாவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் சர்ரெனச் சுருங்கிப் போவது ஏமாற்றமளிக்கிறது. லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் இல்லை.
மொத்த ஏரியாவையும் கன்ட்ரோலில் வைத்திருக்கும் ரஜினிக்கு முதல் காட்சியில் கலாட்டா நடப்பது மட்டும் எப்படித் தெரியாமல் போகும்? மும்பை முழுக்க செல்வாக்கு இருக்கும் ஒருவர் பேப்பர் பார்த்துதான் தன் ஏரியா பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வாரா என்ன?
ஆனால், நிகழ்கால நிதர்சனங்களுக்கிடையே இவ்வளவு துணிச்சலாக அரசியல் பேசவும் ஒரு தில் வேண்டும் ரஞ்சித். கிரேட்!