வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார்.
மேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியின் அனுமதிப்பத்திரத்தை நீடிக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி முக்கிய அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்களும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் எனக் கூறப்படுகிறது எனவும் அவருக்கு எதிரான அரசியல் சக்திகளால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தந்தையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திராநேரு, விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கான முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்ற இளையதம்பி நாகேந்திரன் லிங்கராஜா என்பவரும், கிளிநொச்சியில் நடைபெற்ற சுனாமி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்த இனியபாரதி என்ற கே. புஷபகுமார் என்பவரே சந்திராநேருவின் கொலையுடன் தொடர்புள்ளவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இனியபாரதி அப்போது இராணுவத்துடன் இணைந்டது செயற்பட்ட கருணா தரப்பின் அம்பாறை மாவட்டக்கான கட்டளையிடும் பொறுப்பில் இருந்தார்.
கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர், இனியபாரதி அந்த கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணைப்பதிகாரியாக செயற்பட்ட இனியபாரதிக்கு தேசமாமன்ய என்ற கௌரவ விருது வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதேவேளை சிரியாவின் ஹோமிஸ் நகரில் இருந்த தற்காலிக ஊடக மத்திய நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின், இலங்கையில் அன்று நடைபெற்ற போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகத்திற்கு வழங்கியவர்.
இவர் வழங்கிய செய்திகள் மூலம் வெள்ளைக் கொடி விவகாரம் முழு உலகத்திற்கும் தெரியவந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெள்ளை கொடி விவகாரத்தில் ரொஹின் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தலையீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் மாரி கொல்வின் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ நான் இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் இளம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஹன் சந்திராநேருவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன்.
அப்போது அவர் இவ்வாறு கூறினார். நிலைமை மோசமான நேரத்தில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு பேசினேன். நடேசன் மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த, உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் தருவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.
நான் அங்கு சென்று சரணடைந்தவர்களை அழைத்து வருகிறேன் என்று நான் கூறினேன்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ”இல்லை தேவையில்லை. எமது இராணுவம் மிகவும் நட்புறவான மற்றும் ஒழுக்கமுள்ளது. இதனால், நீங்கள் கலவரப்பட வேண்டாம் எனக் கூறியதுடன் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்கு சென்று உயிர் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியை தொடர்புக்கொண்ட பின்னர் ரொஹன் சந்திராநேரு அமைச்சர் பசில் ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார்.
பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் சகோதரர். வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுமாறு நடேசன் உள்ளிட்டோரிடம் கூறுமாறு பசில், சந்திராநேருவிடம் கூறியுள்ளார்.
இந்த சகல செய்திகளுடன் சந்திராநேரு, இலங்கையின் நேரப்படி அதிகாலை 6.20 அளவில் நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார்.
அப்போது துப்பாக்கிச் சத்தம் முழு வன்னியிலும் எதிரெலித்துக்கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய செல்ல நாங்கள் தயார் என நடேசன் துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியில் என்னிடம் தெரிவித்தார்.
முடிந்தளவு கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.அவர்கள் வெள்ளைக் கொடியை காண வேண்டும் என நான் நடேசனிடம் கூறினேன் என சந்திராநேரு குறப்பிட்டார்”
இதற்கு அமைய நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எப்படி இறந்தனர்?
அந்த குழுவில் இருந்த ஒருவரே எனக்கு தகவல் வழங்கினார். அன்று நடேசன், புலித்தேவன் உட்பட பெரும்பாலானோர் வெள்ளைக் கொடியை ஏந்திவாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்தனர். எனினும் நீண்ட தூரம் அவர்களுக்கு வர முடியவில்லை.
இலங்கை இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் நடேசன் உள்ளிட்டோரின் உடலை துளைத்துச் சென்றன.
நடேசனின் மனைவி சிங்கள பெண். இடைவிடாது பொழியப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுக்கு மத்தியில் நடேசனின் மனைவி சத்தமிட்டார். “ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள் என சத்தமிட்டார்“.
எனினும் அதற்கு மேல் அவருக்கும் ஏதுவும் பேச முடியாது அவரது குரலும் அடங்கி போனது. அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்தார் என மாரி கொல்வின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்களை வழங்கிய மூலம் தற்போது மறைந்து வாழ்கிறது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களின் தரப்பில் ஏற்படும் அச்சுறுத்தல் சிறிய விடயம் அல்ல என்பதால், ரொஹான் சந்திராநேரு நாட்டை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். என அந்த சிங்கள இணையத்ததில் கூறப்பட்டுள்ளது.