நடிகை நக்மா பதவி பறிப்புக்குக் காரணமான 6 வில்லங்கங்கள்!

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி, நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னணியில் ஆறு பிரதான காரணங்கள் இருப்பதாக, காங்கிரஸ் வட்டாரம் முணுமுணுக்கிறது.

நடிகை நக்மா

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த 2018 மார்ச் 7-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. புதுச்சேரி மகிளா காங்கிரஸில், நக்மாவுக்கு குறிப்பிடும் வகையில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தமிழக மகிளா காங்கிரஸில் கோஷ்டி பூசல் காரணமாக நக்மாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்தன. இதன்விளைவு, அவரிடமிருந்து தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி, சமீபத்தில் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக மகிளா காங்கிரசைப் பொறுத்தவரை நடிகை குஷ்பு தலைமையில் ஒரு கோஷ்டியும், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜான்சிராணி தலைமையில் இன்னொரு கோஷ்டியும் செயல்பட்டுவருகிறது. நக்மா, தமிழக மகிளா காங்கிரஸுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவரின் ஆதரவாளர்கள் தலைமையில் மூன்றாவது கோஷ்டி உருவானது. இதனால், சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் கூட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ற சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி, தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குஷ்பு, ஜான்சிராணி தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், நக்மா ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

நக்மாவின் பதவி பறிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நக்மாவை, தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்ததும், எல்லோரும் சந்தோஷப்பட்டோம். ஆனால், அவரின் சில செயல்பாடுகளால் எங்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. பல பிரச்னைகள் இருந்தாலும், ஆறு பிரதான காரணங்கள் இவை… கட்சியின் சீனியர்களை அவர் மதிக்கவில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக அவரின் ஆதரவாளர் ஒருவரை மாநிலத் தலைவர் பதவிக்குக் கொண்டுவர முயற்சிசெய்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் தலைவர் ஜான்சி ராணிக்கும் நக்மாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நடிகை குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையே சீனியர் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. நக்மாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டது, மற்றவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், குஷ்பு சில கூட்டங்களைப் புறக்கணித்தார்.

தமிழகத்தில் மகிளா காங்கிரஸ் கூட்டத்துக்கு வரும் நக்மாவுக்கு தலப்பாகட்டு பிரியாணி,  ஃபிஸ் பிங்கர், ட்ரை ஃப்ரூட்ஸ், கூல் ட்ரீங்ஸ், குறிப்பிட்ட ஹோட்டலில் அறை என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த நக்மா, நள்ளிரவில் தலப்பாகட்டு பிரியாணி கேட்டார். அந்த நேரத்தில் எங்கு சென்று தலப்பாகட்டு பிரியாணி வாங்க முடியும். ஹோட்டலில் அறை புக் செய்திருந்தாலும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில்தான் அவர் தங்குவார். மேலும், அவருக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே அருகில் அமர வைத்துக்கொள்வார். இதெல்லாம் வெளிப்படையாகவே தெரிந்த சிக்கல்கள்.

சத்தியமூர்த்தி பவனுக்கு நக்மா வரும்போதெல்லாம் ஒரு தரப்பினரால் அவருக்கு பிரச்னை ஏற்படுத்தப்பட்டது. மேலும், நக்மாவுக்கு எதிராக மேலிடத்துக்கு புகார்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன. ஆனால், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றிய ஷோபா ஓஜா, எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், சோனியாவுக்கும் ராகுல்காந்திக்கும் நக்மா தொடர்பான புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக மகிளா காங்கிரஸ் பஞ்சாயத்து டெல்லிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. நக்மாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷோபா ஓஜா மாற்றப்பட்டு, சுஷ்மிதா எம்.பி., தலைவராக நியமிக்கப்பட்டார். ஷோபா ஓஜா ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். நக்மாவிடம் இருந்த தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நக்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, மகிளா காங்கிரஸின் நிலைமை மோசமாகிவிட்டது. இதனால்தான் அவரிடமிருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்ற ஆசையில்தான் நக்மா இருந்தார். ஆனால், அவரின் கனவு நிறைவேறவில்லை. நக்மாவின் பதவி பறிக்கப்பட்டதுபோல அவரின் ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தால் மட்டுமே மகிளா காங்கிரஸ் வளர்ச்சியடையும்” என்றனர்.

நக்மா ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “மகிளா காங்கிரஸில் நடந்த சில விவகாரங்களைத் துணிச்சலாக வெளியில் தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் உத்தரவை  மகிளா காங்கிரஸின் மாநிலத் தலைவர் தரப்பு மதிப்பதில்லை. மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஜான்சி ராணிக்கு, பொன்னம்மாள் என்பவரின் பேத்தி என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை. கட்சித் தலைமையின் அனுமதியில்லாமல் ஜான்சிராணி அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவிகளைக் கொடுத்தார். அதை நக்மா தட்டிக்கேட்டார். இதனால், நக்மாவுக்கு ஜான்சிராணி தரப்பு பலவகையில் தொல்லைகொடுத்தது. அதன்விளைவே, வாட்ஸ் அப்பில் பரவிய ‘கால் கேர்ள்’ என்ற ஆடியோ. நக்மாவின் செயல்பாடுகளைப் பிடிக்காதவர்கள், அவர்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைச் சொல்கின்றனர். தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவரை விடுவித்தாலும் ஜம்மு-காஷ்மீருக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையைப் பொறுத்தவரை மகிளா காங்கிரஸில் உள்ள 24 பேரை மாற்றம்செய்துள்ளது. அந்தவகையில்தான் நக்மாவும் மாற்றப்பட்டுள்ளார். தலப்பாகட்டு பிரியாணி எனக் காரணம் சொல்லி அவரின் இமேஜை அசிங்கப்படுத்துகிறார்கள்”  என்றனர்.

இதுகுறித்து ஜான்சிராணியிடம் கேட்டதற்கு, “கட்சித் தலைமை நக்மாவை மாற்றியுள்ளது. அவருக்குப் பதிலாக பாத்திமா என்பவரை நியமித்துள்ளது. நக்மாவை மாற்றியது தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. தமிழக மகிளா காங்கிரஸை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வோம்” என்றார்.

நடிகை நக்மாவின் கருத்தை அறியும் முயற்சிக்கு இதுவரை பலன் கிட்டவில்லை. அவர் தரப்பு கருத்தைத் தெரிவித்தால், பரிசீலனைக்குப்பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!