கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்கொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று நண்பகல் முற்படுத்தப்பாட்டார்.தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாலும், ஏனையவர்களை கைது செய்ய உள்ளதாலும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கவேண்டும்’ என்று பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.தாக்குதலுக்கும் சந்தேகநபருக்கும் தொடர்பில்லை. சந்தேகநபர் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நணபர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார்’ என்று சந்தேகநபர் சார்பில் மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்பட்ட மற்றொரு இளைஞன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். உடுவிலைச் சேர்ந்த அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .