யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா?: ஒரு அதிர்ச்சியான நேரடி ரிப்போர்ட் (வீடியோ)

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் இரண்டாவது தடவையாக இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் இன்று வெள்ளிக்கிழமை(08)இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று வியாழக்கிழமை சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் குழந்தைக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

20180608_105915-1 யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா?: ஒரு அதிர்ச்சியான நேரடி ரிப்போர்ட் (வீடியோ) யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா?: ஒரு அதிர்ச்சியான நேரடி ரிப்போர்ட் (வீடியோ) 20180608 105915 1

இந்நிலையில் நேற்று நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன. அத்துடன் குறித்த குழந்தையின் உடலில் இறந்த பின்னர் ஏற்படுவது போன்று எவ்வித மாற்றமுமின்றிக் காணப்பட்டமை அங்கு நின்ற பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளததுடன் அப்பகுதியில் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் எடுத்துச் சென்ற உறவினர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை குறித்த குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து மீண்டும் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் குறித்த குழந்தையின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதாகக் கேள்விப்பட்டுச் சுயாதீன ஊடகவியலாளரொருவர் குழந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சென்ற சில நிமிடங்களில் குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமையால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அவர் இவ்வாறு கூறிய சில நிமிடங்களில் குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமையால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலிருந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதன் போது குறித்த குழந்தையின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த குழந்தையின் உடலிலிருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன் மூக்குச் சளி, சலம் என்பனவும் வெளியேறியுள்ளன.

அதுமாத்திரமன்றி உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.

அத்துடன் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.

இதனால்,குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்துக் குழந்தை உயிருடன் மீண்டு வருவாள் என்ற மாறாத நம்பிக்கையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இடைவிடாது வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையின் இறுதிக்கிரியைகளுக்காக வீட்டின் முன்னால் அமங்கலத்தைக் குறிக்கும் வகையில் வாழைக்குட்டி, தோரணம் என்பன கட்டப்பட்டிருந்ததுடன் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மதில் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இன்று பிற்பகல் உயிரிழந்த குழந்தையின் மரண அறிவித்தல் இடம்பெறுமெனவும் இன்று காலை ஒலிபெருக்கி மூலம் குறித்த பிரதேசம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் இரண்டாவது தடவையாகவும் குழந்தை உயிருடனிருப்பதாகத் தெரிவித்துக் குறித்த குழந்தையின் இறுதிக்கிரியைகள் இரண்டாவது தடவையாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சங்குவேலி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.