நாட்டை உலுக்கிய மஹிந்த காலக் கொலைகள் – பின்னணியில் யார்?

இலங்கையைப் பொறுத்தவரையிலும் கடந்தகால ஆட்சியாளர்கள் தமது அரசியல் எதிர்காலத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்வதில் அதி தீவீரத்தைக் காட்டி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை விமர்சித்து, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆட்சி பீடமேறிய அரசாங்கம் செய்வது என்ன?

தற்போதைய நிலையில் கடந்த கால அல்லது நிகழ்கால பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை புறம் ஒதுக்கிவிட்டு, ஏற்கனவே இடம்பெற்ற ஊடக மீறல்கள், கொலைகள், ஊடக நிலையங்கள் தாக்கப்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகள் இன்று வரையிலும் மர்மமாகத் தொடர்வது எதனால் என்ற கேள்வி பிரதானமானது.

உதாரணமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்கும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன.

இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மறைக்கப்படும் மர்மங்கள் என்ன? போன்றவை தொடர்பாக பகிரங்கப் படுத்தும் ஓர் பதிவாகவே இந்தப் பதிவு அமையப்போகின்றது.

இதோ குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம் கைது செய்து விடுவோம் என அன்றாடம் புதுப்புதுத் தகவல்கள் வெளிவருகின்ற ஆனாலும் இந்த விடயத்தில் முன்னேற்றம் எந்த இடம் என்பது கேள்விக்குறி.

உதாரணமாக இலங்கைப் பொலிஸாரும், புலனாய்வுத்துறையும் திறன் மிகுந்தவர்கள் பல வித மர்மங்களையும், கொலைகளையும் வாரப்பொழுதில் கண்டு பிடித்துள்ளார்கள் என்பது நிதர்சனம். இந்த நிலையில் மேற்குறித்த இரு வழக்குகள் மாத்திரம் மர்மமாக தொடர்வதன் மூலம் இது அரசியல் சார்ந்தது என்பதும், இதன் உச்சத்தில் அரசியல் பின்புலன்கள் செயற்பட்டு வருகின்றது என்பது தெளிவாகி விடுகின்றது.

கீத் நொயார் மற்றும் லசந்த ஆகிய இருவர் தொடர்பிலான வழக்கு முறையே B 1535/2008, B 92/2009 ஆகிய வழக்கு இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு வழக்குகளும் கடந்தகால ஆட்சியாளர்களைளும் குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாவையும் மையப்படுத்தியே சுழன்று வருகின்றது என்பது வெளிப்படை.

2008 மே மாதமளவில் கீத் நொயர் கடத்தப்பட்டது மற்றும் தாக்கப்பட்டது தொடர்பாக கடந்த வருடம் மேஜர் பிரபாத் புலத்வத்த, லான்ஸ் கோப்ரல் ஹேமசந்திர பெரேரா, கோப்ரல் துமிந்த வீரரட்ன, கோப்ரல் லஸந்த விமலவீர, மற்றும் இராணுவ வீரர் நிஸாந்த ஜயதிலக, லான்ஸ் கோப்ரல் நிஸாந்த குமார, கோப்ரல் சந்திரபால ஜயசூரிய ஆகியோர் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, லசந்த மற்றும் கீத் நொயர் ஆகியோரின் வழக்கில் தொடர்ச்சியான விசாரணைகளை முறையாக மேற்கொள்ள திட்டங்களை வகுத்ததாகவும், இதன் விசாரணை அறிக்கைகளை தன்னிடமும், புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரணவிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொண்ட கோட்டாபய, இதனை முன்னிட்டு வாராந்த புலனாய்வு ஒன்று கூடல்கூடல்களை அப்போதைய காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மூலம் ஒழுங்கு செய்திருந்தார்.

மேலும், தான் பதவி வகித்த காலகட்டத்தில் அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் சந்திரவகிஸ்ர, முன்னாள் தேசிய புலனாய்வு பொறுப்பதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோரிடம் இருந்து லசந்த மற்றும் கீத் நொயார் ஆகியோரின் வழக்கு தொடர்பான தகவல்களையும், ஆதாரங்களையும், சாட்சிகளையும் தான் பெற்றுக் கொண்டதாக ஏற்கனவே கோட்டாபய தெரிவித்திருந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு செவ்வாயன்றும் விசாரணை அறிக்கைகளும், தகவல்களையும் தான் பெற்றுக் கொண்டதாக கோட்டாபய கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஹெந்தவிதாரண தெரிவிக்கும் போது, “கீத் நொயார், லசந்த ஆகியோரின் வழக்கு அறிக்கைகள் கோட்டாபயவிடமும், என்னிடமும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது எனவும், என்றாலும் அந்த விசாரணைகளில் இருந்து எந்த வகை முடிவுகள் எட்டப்பட்டன என்பதும் நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை, அதே சமயம் இந்த குற்றங்களுக்கு யாரைக் கைகாட்டுவது என்பதில் கோட்டாவிற்கும் தெளிவிருக்கவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சரத் பொன்சேகாவே இந்த குற்றங்களுக்கு பிரதான காரணம் என்பதை கோட்டாபய தெரிவித்ததோடு அவர் இதனை அறிந்திருந்தபோதிலும், இந்த விசாரணைகளின் சாட்சியங்களைப் பெறும் அனுமதியை குற்றப் புலனாய்விற்கு கோட்டாபய ஒப்படைத்திருந்தார் எனவும் ஹெந்தவிதாரன சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு மறுமொழியளித்திருந்த கோட்டா “இந்த விடயத்தில் ஒரு பாதுகாப்பு செயலாளர் என்ற காரணத்தினாலேயே நான் நடவடிக்கை எடுக்கவில்லை, இதன் மூலம் இலாபமடைய முனையவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.

அடுத்தபடியாக, இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வழங்கிய போது “இந்த வழக்குகளுடன் நான் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் கோட்டாபயவிற்கு கிடைக்கப்பெறாத போதிலும், 2010 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் திட்டமிட்டு என்னை பழிவாங்குவதற்காக என்னை சிறையில் அடைத்தார். உண்மையில் கோட்டாபய சுய மரியாதை உள்ள ஒருவராக இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொன்சேகா கோட்டாபயவையும், கோட்டாபய பொன்சேகாவையும் மாறி மாறி குற்றம் சுமத்தி வந்தனர் இதற்கு நடுவில் பிரபல அதே சமயம் முக்கிய அரசியல் புள்ளிகள் லசந்தவின் கொன்றது யார்? கீத் நொயார் வழக்குடன் தொடர்பு பட்டவர் யார்? என்ற விடயம் தங்களுக்குத் தெரியும் எனவும் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் கூட எதன் அடிப்படையில் இவ்வாறான அறிவிப்புகளை விடுத்தனர்? அரசியல் அழுத்தங்களா அல்லது சுய பிரச்சார நடவடிக்கையா இரண்டும் இல்லாது திசைதிருப்பும் முயற்சியா? எதற்காக இவ்வாறாக கருத்துகள் பரப்பப்பட்டன என்பது இலைமறை காய்தான்.

இவ்வாறான பின்னணிகளின் பின்னால் ஓர் அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது தெரிந்திருந்தும் கூட அவற்றினை பகிரங்கமாக தெரிவிக்கும் ஆற்றல், துணிவுகள் முடக்கப்பட்டன.

காரணம் அதிகாரத்தின் அடக்குமுறை எனவும் கூறிவிடலாம். ஆனால் திரை மறைவில் அனைத்தையும் இயக்கும் சக்தி என்ன என்ற அம்பலப்படுத்தல் இப்போதைய நிலையின் அவசியமான ஒன்றாகும்…