மரங்களை அடியோடு சாய்த்து வரும் புல்டோசர் முன்பு உராங்குட்டான் குரங்கு மன்றாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பனை எண்ணெய் மரங்களை நடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வீடான மழைக் காடுகளை அழித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உராங்குட்டான் குரங்குகள்தான்.
பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பாமாயில் அரசியல் பற்றியும் அழிந்து வரும் உராங்குட்டான் பற்றியும் “உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா?
இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..!’’ என்னும் தலைப்பில் விகடன் கட்டுரை ஒன்று அண்மையில் வெளியானது. அதில், உராங்குட்டான் இனம் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இப்போது விஷயத்துக்கு வருவோம்… கடந்த ஜூன் 5-ம் தேதி (உலகச் சுற்றுச்சூழல் தினம்) சர்வதேச விலங்குகள் அமைப்பு ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட உராங்குட்டானின் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் உராங்குட்டான் குரங்கு தன் இருப்பிடத்துக்காகப் போராடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
நீங்கள் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீட்டை யாரென்றே தெரியாதவர்கள் ராட்சச இயந்திரங்களைக் கொண்டு வந்து தரை மட்டம் ஆக்கினால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு உணர்வுதான் இந்த வீடியோவை பார்க்கும்போது கிடைக்கிறது.
சுற்றும்முட்டும் மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன.. தன் இருப்பிடம் தன் கண்முன்னே தரைமட்டமாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல், உயிரற்ற அந்த ராட்சச இயந்திரத்துடன் சண்டையிடும் இந்த உராங்குட்டான், சுயநலத்துக்காகக் காடுகளை அழித்துவரும் பெரு முதலாளிகளின் மனசாட்சியை உலுக்கவில்லையா?