வவுனியாவில் இடம்பெற்ற குழந்தை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 2 பெண்களும் ஆணொருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின்; விசேட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி கோரளகெதர தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் கடத்தலுடன் தொடர்புடைய 8 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் மட்டகளப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரில் ஒருவர் முல்லைத்தீவையும் மற்றையவர் வவுனியாவைச் சேரந்;தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தையின் தந்தையார் வவுனியாவைச் சேர்ந்த நபரினூடாக பணபேரம் பேசியதாகவும் குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் 90000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு தலா 5000 ரூபா கொடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளினூடாக தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தையை கடத்தி இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தமையும் பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் அறியக்கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.