கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
அதேவேளை, புதிய ஜனநாயக கட்சி 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இரந்த லிபரல் கட்சி 7 ஆசனங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
முதல் முறையாக இரண்டு ஈழத் தமிழர்கள் ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் விஜய் தணிகாசலம், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி வெற்றி பெற்றார். அவருக்கு, 18,943 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் 50.5 வீதமாகும்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூனிதா நாதன் 24 வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
அதேவேளை, ஸ்காபரோ கில்வூட் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரட்ணம், 81 வாக்குகளால் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
லிபரல் கட்சி வேட்பாளர், மிட்சி கன்டர் 11,965 வாக்குகளையும், ரொசான் நல்லரட்ணம் 11,884 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கிடையே, இம்முறை ஒன்றாரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 10 தெற்காசிய நாட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.