நெல்லை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்பாலன் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ மார்கெட்டிற்கு செந்தில்பாலன் தான் கொண்டு சென்றுள்ளார்.
அதேபோல் இன்றும் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளை மார்க்கெட் பூவை கொடுத்து விட்டு, திரும்பி ஊருக்கு வரும் போது காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளார்.அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த சரக்கு ரயில் முன் திடீரென பாய்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்னர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் செந்தில்பாலன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.அதில், செந்தில்பாலன் ஒரு பெண்ணை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததும், தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இறப்பது முன்னால் அவர் தனது மொபைல் போனில் இதயம் உடைந்தது போல் முகப்புப் படத்தை வைத்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், வறுமையிலும் தந்தை பூ விற்று படிக்க வைத்த நிலையில், அதை உணராமல் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மகனை நினைத்து தந்தை கதறி அழுதுள்ளார்.