வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளை (திங்கட்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பேரணிக்கு ஆதரவாக அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை கடையடைப்பை முன்னெடுத்து ஆதரவு வழங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் வே. தவச்செல்வம் அழைப்புவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வர்த்தகர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், முச்சக்ர வண்டி சாரதிகள் உள்பட அனைவரையும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பகிரங்க அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை வழமைபோன்று இயங்குமாறும் சம்மேளனம் இதன் போது கேட்டுள்ளது.எமது இந்தக் கண்டனப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேள அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரை இடம்பெறும்.
இந்தப் போராட்டத்துக்கும் சரியான தீர்வு வழங்கப்படாதுவிடின், வடக்கு வருகை தரும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்திப் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும்.
குறிப்பாக எமது மக்களின் போராட்டத்தில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள முடியுமே தவிர, அவர்கள் இதில் அரசியல் நடத்த முடியாது. எங்களுடைய மக்களுக்கு அரசியல்வாதிகள் தலைமை தாங்க முடியாது என சம்மேளம் இன்று தீர்மானம் எடுத்துள்ளது.
அதன்பிரகாரம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் எமது போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புவிடுகின்றோம். நீங்கள் இந்த மக்களின் மீது கரிசனையிருந்தால் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள். எமது போராட்டத்துக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் கடற்தொழிலாளர் சமாச தலைவர் தெரிவித்துள்ளார்.