இராஜினாமா கடிதத்தில் முக்கால் பங்கை எழுதி விட்டேன்! – சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அல்லது அது உருவாக்கப்படா விட்டாலும் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சிக்குள் தங்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், தொடர்ச்சியாக உங்கள் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகமொன்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நான் தமிழ் மக்களது நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றே கட்சிக்குள் வந்தேன்.

இவ்வாறான நிலையில் நான் எனது கட்சியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தில் முக்கால் பங்கை எழுதி விட்டேன். மீதமாக சிறிதளவே எழுத வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாது விட்டாலும் அதற்கான முழுமையான பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டு கட்சியில் இருந்து வெளியேறி விடுவேன்.

இந்த விடயத்தை நான் ஏற்கனவே பாராளுமன்றக் கூட்டத்திலும் தெரிவித்து விட்டேன். எனவே என்னைக் கட்சியில் இருந்து விலக்குவது தொடர்பாக எவரும் வீணாக முண்டியடிக்கத் தேவையில்லை என்றார்.