பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவின் அணிவகுப்பில் பங்கேற்ற சிப்பாய்களில் ஒருவர் முதல்முறையாக தலைப்பாகையை அணிந்திருந்தார்.
ராணியின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவில் சுமார் 1,000 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
அதில் லெஸ்டரை சேர்ந்த 22 வயதான காவலாளி சரண்ப்ரீத் சிங் லால், இது “வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாற்றமாக” பார்க்கப்படும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.
பல்வேறு மதங்கள் மற்றும் பின்னணி கொண்டவர்கள் ராணுவத்தில் சேர இந்த நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதை பார்க்கும் மக்கள், இதனை ஏற்றுக் கொண்டு வரலாற்றில் ஒரு மாற்றமாக பார்ப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த சரண்ப்ரீத் சிங், குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சரண்ப்ரீத் பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார்.
மற்ற சிப்பாய்கள் கரடி தோலினால் ஆன தொப்பிகளை அணிந்திருந்தபோது, இவர் மட்டும் நட்சத்திரம் வைத்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.
விழா தொடங்கும் முன் பேசிய லால், “எனக்கு பெருமையாக உள்ளது. மற்றவர்களும் என்னை நினைத்து பெருமைப்படுவார்கள் என்று தெரியும்” என்றார்.