கனடாவில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் அதில் இருந்தது போதை பொருள் என்பதே எனக்கு தெரியாது என்று நீதிபதியிடம் கூறியுள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் Halifax பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜுன் 27ம் திகதி Geevan Nagendran(38) மற்றும் Mithusha Poobalasingam(22) என்ற ஜோடியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த அந்நாட்டு பொலிஸார், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களிடம், நீதிபதிகள் வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, Mithusha Poobalasingam என்ற பெண், “Rick என்ற நபர் தான் தனக்கு புதிய தொலைபேசி வாங்கிக் கொடுத்ததுடன், இரண்டு சிம் அட்டைகளையும் கொடுத்தார்.
அதில் ஒரு சிம் அட்டையை தன்னிடம் பேச வைத்துக் கொள்ளும்படியும், இன்னொரு சிம் அட்டையை கூரியர் சேவை அலுவலகத்திடம் பேசுவதற்கு வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
ஏனெனில் அவருக்காகத் தான் நாங்கள் அதை வாங்கச் சென்றோம். இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கூரியர் என்பதால், நாங்கள் ஏதோ சேலையாக இருக்கும் என்று நினைத்தோம்.
காரணம் நேரடியாக இங்கு கொண்டு வர வேண்டும் என்றால், வரி அதிகமாக இருக்கும். இதனால் கூரியர் மூலம் சேலைகளை அனுப்பியுள்ளனர் என்று நினைத்தோம்.
ஆனால் பொலிஸார் கைது செய்த பின்னரே அதில் இருப்பது போதை பொருள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட நீதிபதி, “Mithusha Poobalasingam இன் கருத்து ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அப்படி அவர்கள் சேலையே அனுப்பியிருந்தாலும், அதுவும் சட்டவிரோதமானது. அதுவும் ஒரு குற்றம் தான்.
மேலும் பொலிஸார் இது குறித்து சமர்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களும் போதுமான அளவில் இல்லை.
இருப்பினும் Mithusha Poobalasingam மற்றும் அவரது காதலன் Geevan Nagendran இதில் ஈடுபட்டுள்ளதால், இவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்படும்” என்று நீதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், “கடந்த ஆண்டு கூரியர் மூலம் இந்தியாவிலிருந்து பொதி வந்தது. அதை Canada Border Services Agency சோதித்து பார்த்த போது, அந்த பார்சலில் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அந்த போதை பொருளை எடுத்துவிட்டு, மீண்டும் அதே போன்று பாக்கிங் செய்து அதனுள் ஒரு டிராக்கிங் டிவைசை வைத்து குறித்த முகவரிக்கு அனுப்பி வைத்தோம்.
அந்த பார்சலை திறந்தவுடன், சவுண்ட் வரும் படி செய்திருந்தோம். அதன் படியே இவர்கள் Halifax பகுதியில் பார்சலை பெற்ற போது கைது செய்ததாக பொலிசாஸார் கூறியுள்ளனர். இதில் Mithusha Poobalasingam டோரோண்டாவில் வசித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.