கடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது கொரியா மீட்கப்பட்டது. போரில் வென்ற வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கொரியாவை இரண்டாகப் பிரித்தன.
ரஷ்யாவின் ஆதரவுடன் வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவில் முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன.
1950 ஜூனில் தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் தொடுத்தது. இந்த போர் 1953 ஜூலை வரை நீடித்தது. இதன் பின்னரும் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்து வந்தது.
கடந்த 2011 டிசம்பரில் கிம் ஜாங் உன், வடகொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன்பின் அந்த நாடு அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளா தார தடைகளை விதித்தன.
இந்தப் பின்னணியில் தென்கொரியாவின் தீவிர முயற்சியால் சியோ லில் கடந்த பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.
அதன்பின் கடந்த ஏப்ரலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார்.
இதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி ட்ரம்ப்பும் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ‘ஏர் சீனா’ விமானத்தில் நேற்று முன் தினம் மதியம் சிங்கப்பூர் சென்றார். அதேபோல், டிரம்பும் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.
இதன்பின், சிங்கப்பூர் பிரதமர் லீ – ஐ இரு நாட்டு தலைவர்களும் தனித்தனியே சந்தித்தனர். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட செய்தியாளர் கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சந்திப்பு நடைபெற உள்ள கேபெல்லா ஹோட்டலுக்கு இரு தலைவர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
சரித்திர சிறப்பு வாய்ந்த சந்திப்பு
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு இன்று காலை 6.30 ( இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது. இரு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின்போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருப்பார் என கூறப்படுகிறது.