புத்தகங்கள் அவரை 17ஆம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக தீவிரமாக போராடிய ஆஃப்ரிக்க பெண்ணாக விவரிக்கின்றன.
ஆனால், அதே நேரம் அவரை பற்றிய எதிர்மறை கருத்துகளும் இல்லாமல் இல்லை. பதவிக்காக, அதிகாரத்திற்காக சகோதரனை கொன்ற கொடுமைகார பெண்ணாக சித்திரிக்கும் புத்தகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னும் சிலர், பாலியல் இச்சைகளை அனுபவித்துவிட்டு ஆண்களை கொன்ற பெண்ணாகவும் அவரை சித்தரிக்கின்றன.
எதுவாயினும், அரசி கிங்கா ஆஃப்ரிக்க வரலாற்றில் ஆதிக்கத்திற்கு எதிராக பெரும்போர் தொடுத்த பெண். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆஃப்ரிக்காவுக்கு வெளியே அதிகம் அறியப்படாமலே போய்விட்டார்.
ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு எதிராக தீவிரமாக போரிட்டார் அரசி கிங்கா என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
யார் இந்த கிங்கா?
கிங்கா, முபுண்டு மக்களின் தலைவி, ஆஃப்ரிக்காவில் தென்மேற்கில் உள்ள மடாம்பாவின் ராணி. இப்போது நாம் இந்த பகுதியினை அங்கோலா என்று அறிகிறோம்.
தங்கத்திற்காகவும், வெள்ளிக்காகவும் இந்த பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போர்சுகீசிய படைகள் மடாம்பா பகுதிக்குள் 1575இல் படையெடுத்தன.
ஆனால், அவர்களால் அங்கு எந்த சுரங்கத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமடைந்த போர்சுகீசிய படைகள் விடுவதாயில்லை. அந்த மக்களை கொண்டு அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டன. அவர்களது காலனிய நாடாக இருந்த அப்போது இருந்த பிரேசில் நாட்டிற்கு அதிகளவில் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். அந்த தேவையை இந்த மக்களைக் கொண்டு பூர்த்தி செய்ய விரும்பியது போர்ச்சுகல்.
போர்ச்சுகல் அந்த பகுதியினை ஆக்கிரமித்து, சரியாக எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தார் கிங்கா. இளம்வயதிலிருந்தே போர்ச்சுகல் ஆக்கிரமிப்புக்கு எதிராக தன் தந்தை அரசர் மபாண்டி கோலா போராடி வருவதை பார்த்தே வளர்ந்தார் அவர்.
அரசர் 1671 ஆம் ஆண்டு இறந்தார். அவருக்குப் பின், அவரது மகன் கோலா ஆட்சி பொறுப்பை ஏற்றார். ஆனால், அவரது மகனுக்கு தந்தையை போல மக்களை கவரும் கரிஷ்மாவும் இல்லை, சகோதரி கிங்காவை போல புத்திசாலிதனமும் இல்லை. ஆட்சியை நிர்வகிக்க திணறினார்.
பாதுகாப்பற்றவராக உணர்ந்தார். இந்த உணர்வு வேறுவிதமாக வெளிப்பட்டது. தன் சகோதரி மகனால் எதிர்காலத்தில் தான் ஆட்சியை இழக்க நேரிடும் என்று அஞ்சிய அவர், அவருக்கு மரணதண்டனை அளிக்க உத்தரவிட்டார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு தன்னால் ஐரோப்பியர்களை எதிர்கொள்ள முடியாது என்பது புரிய தொடங்கியது.
போர்ச்சுகலுடன் பேச்சுவார்த்தை
போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய கோலா, தன் சகோதரியின் உதவியை நாடினார். போர்ச்சுகலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும், ஓர் அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும்.
அதற்கு நன்கு போர்ச்சுகல் மொழி அறிந்திருக்க வேண்டும். கிங்கா நன்கு போர்ச்சுகல் பேசுவார். அதுமட்டுமல்ல, அவர் நல்ல ராஜதந்திரியும் கூட. இவைதான், கிங்காவின் உதவியை அரசர் நாட காரணம்.
கிங்கா இந்த பேச்சுவார்த்தைக்காக லூவாண்டா பயணமானார். அங்கு பார்த்த காட்சிகள் அனைத்தும் அவரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தின.
அந்த நகரம் முழுவதும் கருப்பு, வெள்ளை மற்றும் கலப்பினத்தவர்கள் நிறைந்திருந்தார்கள். இது அவர் இதற்கு முன்பு காணாத காட்சி. ஆனால் இவை அனைத்தையும்விட அவரை ஆச்சர்யப்படுத்தியது, அங்கு நீக்கமற காணப்பட்ட அடிமை மக்கள்தான்.
அடிமைகள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த மக்கள் எங்கோ செல்ல துறைமுகத்தில் நின்றுக் கொண்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டார்கள். இதனை கண்டு அதிர்ந்தார்.
இந்த அதிர்ச்சியினை தன்னுள் புதைத்துக் கொண்டு, போர்ச்சுகல் கவர்னருடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்த சென்றார். அங்கு அவர் நடத்தப்பட்ட விதம் அவருக்கு மேலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஒரு சேர தந்தது.
அங்கு அவர் அவமரியாதை செய்யப்பட்டார். ஆளுநரும், போர்ச்சுகல் பிரதிநிதிகளும் செளகர்யமான நாற்காலியில் அமர்ந்திருக்க, கிங்கா தரைவிரிப்பில் அமர பணிக்கப்பட்டார்.
அப்போது கிங்காவின் ஒரு சேவகி, முட்டிக்கால் போட்டு இரு கைகளையும் ஊன்றி நிற்க, அவர் முதுகில் அமர்ந்தார் கிங்கா.
அதாவது, போர்ச்சுகல் அளுநருக்கு சரிசமமான உயரத்தில் அமர்ந்தார் கிங்கா.
இதன் மூலம், கிங்கா போர்ச்சுகலுக்கு உணர்த்த விரும்பியது, “நாங்கள் உங்களைவிட தாழ்ந்தவர்கள் அல்ல. நாங்கள் உங்களுடன் ஒரு சரிசமமான பேச்சுவார்த்தையை நடத்த வந்திருக்கிறோம்” என்பதைதான்.
ஒரு நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் , என்டோங்கோ பகுதியில் உள்ள தங்களது துருப்புகளை திரும்ப பெற்றுக் கொள்ள போர்ச்சுகல் சம்மதித்தது. அதுமட்டுமல்லாமல், அந்த பகுதியின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. ஆனால், அதற்கு பிரதிபலனாக, வணிகத்திற்காக அந்த பகுதியின் பாதைகளை திறந்துவிட வேண்டுமென்றது.
இதற்கு சம்மதித்தார். அதுமட்டுமல்ல, அவர்களுடன் நல்லுறவு பேண கிறிஸ்தவ மதமாற்றத்திற்கும் இசைவு தெரிவித்தார். ஆனால், இந்த உறவு நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை.
பெண், போராளி மற்றும் ராணி
கிங்காவின் சகோதரர், அரசர் கோலா 1624ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கிங்காதான், தனது மகனின் கொலைக்காக பழிவாங்க விஷம் வைத்து அரசரை கொன்றார் என்ற பேச்சுகளும் உலாவியது.
டோங்கோவின் அரசியாக கிங்கா பொறுப்பேற்றார்.
கிங்கா குறித்து புத்தகம் எழுதிய போர்ச்சுகீஸ் எழுத்தாளர் ஜுஜை எட்வார்டோ அக்வாலூஷா, அரசி கிங்கா அரசி மட்டுமல்ல, அவர் சிறந்த ராஜதந்திரியும்கூட” என்று வர்ணிக்கிறார்.
ஆனால், அதேநேரம் அவர் குறித்து எதிர்மறை தகவல்களும் இல்லாமால இல்லை. அவர் அதீதகாமத்தை விரும்பியவர் என்கிறது சில குறிப்புகள்.
அவர் கலவி முடிந்ததும், தன்னுடன் கலவி கொண்டவரை கொடூரமாக கொலை செய்துவிடுவார் என்று விளக்குகிறது அவ்வாறான பதிவுகள்.
ஆனால், இவை அனைத்தும் பொய். அவர் புகழை சிதைப்பதற்காக அவரது எதிரிகளால் இட்டுக்கட்டபட்டவை என்கிறார்கள்.
நான்கு தசாப்த போர்
தனது 82 வயதில், டிசம்பர் 17, 1663ஆம் ஆண்டு இறந்தார் கிங்கா. அதுவரை போர்ச்சுகல் காலனியாதிக்கத்திற்கு எதிராக அதிதீவிரமாக சண்டை இட்டார்.
அவர் இருந்தவரை அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் திணறிய போர்ச்சுகல், அவர் இறந்தவுடன் தங்கள் ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தியது.
தனது வாழ்நாளில் சரிபாதியை, அந்த காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவே செலவிட்ட அரசி கிங்காவை ஆஃப்ரிக்க வரலாறு கொண்டாடுகிறது.
வீதிகளுக்கு, பள்ளிகளுக்கு அவர் பெயர் சூட்டி கெளரவப்படுத்துகிறது. அங்கோலாவின் நாணயத்தில் அவர் படத்தை அச்சிட்டு மகிழ்கிறது.