இராணுவத் தளபதி கேர்ணல் ரத்னப்பிரியவின் பிரியாவிடையின் போது முன்னாள் போராளிகள் கதறியழுதது ஏன்…?

விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படை முகாமிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ உயரதிகாரி கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவின் பிரியாவிடையின் போது, முன்னாள் புலி உறுப்பினர்களும் பொதுமக்களும் கதறியழுத சம்பவம் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அதற்கான காரணத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் விளக்கியுள்ளனர்.இது தொடர்பில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் முன்னாள் போராளி ஒருவர் தாங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி ரத்னப்பிரியவின் பிரியாவிடையில் கண்ணீர் சிந்தியதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

போரால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வழியற்று இருந்த 3500 வடமாகாண மக்களுக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை அவர் பெற்றுக்கொடுத்தார்.இதன் மூலம் இன்றுவரை வடமாகாணத்துக்குள் மாதாந்தம் அண்ணளவாக 11 கோடியே 20 இலட்சம் ரூபாய் புரள்கின்றது.

போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிழந்து, காலிழந்து, உடல் முழுவதும் சன்னங்களுடன் வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்ற எம்மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த மகான் அவர்.வலயக்கல்வி பணிமனையின் கீழ் மாதாந்தம் 3000 ரூபா வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளீர்த்து ரூ. 30,000க்கு மேல் வேதனம் பெறவைத்தார்.

அத்துடன் முன்பள்ளிகளின் கல்வி, கட்டடம், தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார்.கல்வி நிலையங்கள் ஆரம்பித்து தரம் 1 முதல் 11 வரை பலநூறு மாணவர்கள் கற்க வழியமைத்தார்.பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவசாயம், கைப்பணி, தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும்பல துறைகளில் நெறிப்படுத்தினார்.இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார்.போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், கோவில்கள், பல பொது இடங்களை துப்பரவு செய்து தந்தார்.கோவிலை கட்டுவித்து விக்கிரகங்கள் பல செய்வித்து கும்பாபிஷேகமே செய்வித்தார்.

எமது பகுதியில் குளம்கூட கட்டுவிக்க துணை நின்றார்.திணைக்களத்தினுள்ளே நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசை அணி என உருவாக்கி சாதனைகள் பல நாம் பெற வழிசெய்தார்.

திறனுள்ளவர்கள் பலநூறு பேரை உயர்கல்விக்கு அனுப்பி பல துறைகளில் Diploma, Degree பெற செய்து அழகு பார்த்தார்.வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார்.

திணைக்களத்திற்கு அப்பால், பல பொதுமக்கள், பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.வேலை வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது, பணியாளர்களை படிப்படியாக தரமுயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பொற்றுக்கொடுத்தார்.ஆரம்பத்தில் ஒரு தமிழர் தானும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைய முன்வராத சந்தர்ப்பத்திலும் தான் துவண்டுவிடாது கடினப்பட்டு ஆரம்பத்தில் 20 பணியாளர்களை இணைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று மக்களின் மனதில் நம்பிக்கையூட்டி 3500 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொண்டார்.

அரசியல் நெருக்கடிகள்,நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.

பணியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே நிலையறிந்து; உதவிகள் பல செய்து தாயாய்,தந்தையாய்,அண்ணனாய்,நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார் என தெரிவித்த முன்னாள் போராளி, நாம் தமிழராக, எதிரியாக 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும், எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவணைத்த உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது என அவர் கேள்வி எழுப்பினார்.