திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு பெண்ணின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா? நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா? இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா? இல்லை தொடர்ந்து போராடுவாளா? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, அவளது வார்த்தைகளில்.
என் தம்பிக்கு மணமகள் தேடுவதற்காக செய்தித்தாளில் திருமண வரன்கள் பக்கத்தில் இருந்த ஒரு விளம்பரத்தையே நான் உற்றுப் பார்த்துகிட்டு இருந்தேன்.
என்னோட உறவினர்களில் ஒருவர் அந்த பெண்ணுக்கு ‘திருமணமாகாத அக்கா ஒருவர் இருக்கிறார்’ என்ற வரியை சிவப்பு நிறத்துல வட்டமிட்டாங்க.
”அக்காவுக்கு கல்யாணம் ஆகுறவரைக்கும் நம்ம பையனுக்கு ஏத்த பொண்ணு தேடுறதுல நிறைய பிரச்னை வரும்” என்று அவரு சொன்னாரு.
என் இதயத்துல ஈட்டிய ஏத்தின மாதிரி இருந்துச்சு. அந்த வலிய என்னால தாங்கமுடியல; அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டேன்.
உள்ளுக்குள்ள கோபம் கொதிச்சு எழுந்துச்சு. அவருக்கு எப்படி இவ்வளவு பிற்போக்கு எண்ணங்கள் தோன்றும்? யாரோ என் கையை கட்டிப்போட்டு வாயை அடைச்சா எப்படி இருக்குமோ அப்படி எனக்கு மூச்சு திணறிச்சு.
நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது என் தம்பியோட கல்யாணதுக்கு எந்த வகைல தடையா இருக்குதுனு சத்தம் போட்டு கத்தனும் போல இருந்துச்சு.
ஆனா இந்த சூழ்நிலைல நான் அமைதியா இருப்பதே புத்திசாலித்தனம். நான் அதத்தான் செஞ்சேன்.
என் அப்பாவும் தம்பியும் இதை எதிர்ப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா மத்த உறவினர்கள் மாதிரி அவங்களும் என் உணர்வுகளை அலட்சியப்படுத்திட்டாங்க.
என் அம்மா என்ன எப்பவும் புரிஞ்சுக்குவாங்க; இதை பத்தின பேச்சு வந்தாலே அத நிறுத்த முயற்சிப்பாங்க.
ஆனா அவங்க பையனுக்கு கல்யாணம் ஆகப் போறத நெனச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் கல்யாணத்த பத்தி என் பெற்றோர் கனவு கண்டதெல்லாம் ஒரு காலம்.
நான்தான் மூத்தவ என்ற காரணத்துனால எனக்குதான் முதல்ல கல்யாணம் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி. ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கல.
இதில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்த நான் என் பெற்றோருக்குக் கொடுக்கல. இதனால கடந்த சில வருஷமா எங்க எல்லாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.
ஒரு நாள், பள்ளியில என் கூட படிச்ச பழைய நண்பன் ஒருவன் எனக்கு ஃபோன் பண்ணினான். ”நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு எனக்கு தெரியும்.
ஆனா உனக்கு சில தேவைகள் இருக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். நீ விரும்பினா அந்த தேவைகள பூர்த்தி செய்ய நான் உதவி செய்றேன்’. என்று சொன்னான்.
அவனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்றும் சொன்னான். இந்த விஷயத்தை பத்தி அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் தெரியக்கூடாது என்பதுதான் அவனோட நிபந்தனை. இத கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்.
என் தேவைகள் என்னன்னு எனக்கே தெரியல, ஆனா அந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஓர் ஆண் தேவை என்பது மட்டும் எனக்கு தெரியும்.
நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது மத்தவங்கள இப்படியெல்லாம் யோசிக்கவைக்கும் என்பதை என்னால பொறுத்துக்க முடியல.
என் பள்ளிக்கூடத்து நண்பன் ஒருவன் இப்படி கேட்பான் என்று நான் நெனச்சுகூட பார்க்கல.
அவன் இப்படி கேட்டது எனக்கு கோபத்தை ஏற்படுதல, ஆனா இத பத்தி நெனச்சாலே ரொம்ப வருத்தமா இருக்கு. இத உதவி என்று அவன் சொன்னத நெனச்சா சிரிப்பு தான் வருது.
நான் இதுக்குமேலயும் அவனை நண்பனா நினைக்க விரும்பல. அவனை நேரில் சந்திக்கணும்னு நெனச்சாலே பயமா இருக்கு; அவன்கூட பேசவே தயக்கமா இருக்கு.
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்கறத பத்தி யாருக்காவது தெரியவந்தா என்ன பத்தின அவங்களோட அபிப்ராயமே மாறிப்போயிடுது. இதை தொடர்ந்து காபி குடிக்கவும் மதிய உணவு உண்ணவும் அழைப்பு வந்துவிடும்.
இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு. என் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன்.
எனக்கு பிடிச்சத தேர்வு செய்வேன்; பிடிக்காதத நிராகரிப்பேன். தனியாவே இருக்கணும்னு நான் எடுத்த முடிவுக்காக நான் வருத்தப்படல.
கல்யாணம் செஞ்சுக்கமாட்டேன் என்ற முடிவை நான் முதல் முறை என் அம்மாகிட்ட சொன்னப்போ எனக்கு 25 வயசு. நான் அப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். என்னோட லட்சியப் பாதையில பயணிக்கணும், நிறைய சாதனைகள் செய்யணும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன்.
என் அம்மாவுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். ஆனா அம்மா மத்தவங்க கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம திணறிப்போவாங்க.
‘உன் மகளுக்கு எப்போ கல்யாணம்?’, ‘அவளுக்கு பொருத்தமான வரன் கிடைக்கலைன்னா எங்ககிட்ட சொல்லு. நாங்க பார்த்து சொல்றோம்’. என்னோட வேலைலயும் நான் முன்னேறியதுனால எனக்கு மணமகன் தேடுவது இன்னும் தீவிரமாச்சு’
ஆனா என் பெற்றோரிடம் மத்தவங்க சொன்ன மாதிரி ஓர் ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும் என்ற காரணத்துக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.
ஒரு பெண்ணிற்கான சராசரி கல்யாண வயதைத் தாண்டியும்கூட கல்யாணம் ஆகாம அவர்களுடனேயே இருக்கிறேன் என்ற எண்ணம் என் பெற்றோர் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது எனக்கு நல்லா தெரியும்.
நான் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன் என்பதால் எனக்கு கல்யாணம் பண்ணியே தீரணும் என்ற என் அப்பாவின் நோக்கத்துனால எனக்கு ஒன்றில்லை இரண்டில்லை, பதினைந்து மாப்பிள்ளை பாத்தாச்சு.
அவரோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவங்க எல்லாரையும் நான் சந்திச்சேன்; ஆனா அவர்களில் யாரையும் வாழ்க்கை துணையா நான் தேர்வு செய்யல.
மற்றவர்கள் என்ன பத்தி புறம் பேசுவதை நிறுத்தல. ரொம்ப நாள் மனசுல தேக்கிவெச்ச கோபத்தின் வெளிப்பாடாத்தான் இதை பாக்குறாங்க. நான் ‘தற்பெருமை கொண்டவள்’, ‘சுதந்திரமா இருக்கனும்ன்னு நினைப்பவள்’, ‘பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவள்’ என்றெல்லாம் என்னை குறை சொன்னாங்க.
‘முட்டாள்’, ‘நாகரீகமற்றவள்’, ‘பிடிவாதக்காரி’ என்றெல்லாம் பட்டம் கொடுத்தாங்க. இப்படி செய்வதுனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் வந்துடப் போகுதுன்னு எனக்கு புரியல,
அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாதப்போ, என் குணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க.
ஆனா என் மனசாட்சி தெளிவா இருக்கு. எந்த நிலைலயும் யாருடனாவது உறவு வைத்துக்கொள்வதிலோ அல்லது லிவ்-இன் உறவில் ஈடுபடுவதிலோ எந்த தப்பும் இல்ல.
இந்த உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கு.
எனக்கு எப்போ தோணுதோ அப்போ எனக்கு சுகம் தரும் செயல்களை நான் செய்வேன். பெண்கள் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொண்டது போதும்.
எனக்கு வேண்டியதெல்லாம் நான் சுதந்திரமா இருக்கனும். கல்யாணம் என்பது என் பார்வைக்கு அடிமைத்தனமா தெரியுது. ஒரு பறவை போல சுதந்திரமா வானத்துல பறக்கணும். எனக்கு புடிச்ச மாதிரி என் வாழ்க்கைய வாழணும்.
எனக்கு புடிச்சா ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருக்கணும் இல்லைன்னா ஒரு இரவு முழுக்க வெளியிலேயே தங்கிடணும்.
கிளப்புக்கு, டிஸ்கோவுக்கு, கோயிலுக்கு, பூங்காவுக்கு எங்க வேணும்னாலும் நான் போவேன். வீட்டுவேலைகள் எல்லாத்தையும் செய்வேன் இல்லைனா சமைக்கக்கூட மாட்டேன்.
காலையில மாமியாருக்கு காபி போடணும், கணவருக்கு காலை உணவு சமைக்கனும், குழந்தைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் ..இது போன்ற எந்த கவலையும் எனக்கு கிடையாது.
எனக்கு தனியா இருப்பதுதான் புடிச்சிருக்கு. என்னோட சுதந்திரம் எனக்கு புடிச்சிருக்கு. இது எல்லாருக்கும் புரியும்வரை நான் இதை எத்தன முறை வேணும்னா சொல்லுவேன்.
குழந்தைகள், பெரிய குடும்பம் என்று எல்லாம் இருந்தும் தனியா இருக்கா மாதிரி உணருகிற எத்தனையோ பெண்கள நான் பாத்துருக்கேன்.
ஆனா நானோ எப்போதுமே தனியா இருக்கா மாதிரி உணர்ந்தே இல்ல. எனக்கு குடும்பமும் நண்பர்களும் இருக்காங்க. உறவுகளுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன்; அது எனக்கு மகிழ்ச்சிய கொடுக்குது.
கல்யாணமாகாத பெண்ணை இந்த சமூகம் பாரமா பார்க்குது. ஆனா நான் எப்பவுமே இந்த சமூகத்துக்கு பாரமில்லை.
நான் உலகைச் சுற்றித் திரியறேன். எனக்கு வேண்டிய பணத்த நான் சம்பாதிக்கறேன், அத எப்படி செலவு பண்ணனும்னு நான்தான் முடிவு செய்வேன்.
நான் யாருன்னு என் வேலை மூலம் நிரூபிச்சுருக்கேன். என்னை புகழ்ந்து பல கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கு. கல்யாணமாகாத பெண் என்று என்னை கேலி செஞ்ச செய்திதாள்களெலாம் இப்போ தனியாக வாழும் என்னோட தைரியத்த புகழ்ந்து கட்டுரைகள் எழுதுறாங்க.
என் பெற்றோர் என்ன நெனச்சு பெருமைப்படுறாங்க. என் தோழிகள், வெற்றிக்கு எடுத்துக்காட்டா என்னை அவங்களோட பெண்களுக்கு சுட்டிக்காட்டுறாங்க.
இறுதியில் என் விருப்பத்த பத்தி மத்தவங்க என்ன நெனச்சாங்க என்பது முக்கியமில்லை. நான் எனக்காக ஜெயிச்சேன். எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சேன்!
(பிபிசி செய்தியாளர் அர்ச்சனா சிங்கால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட-மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).