“வாழ்க்கை ரொம்ப அழகானது; அதை ரசிச்சுக்கிட்டே இருக்கேன்” என்கிறார், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன். ‘அப்போ இப்போ’ தொடருக்காக அவரிடம் பேசினேன்.
“நான் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு. ஊட்டி அரசுப் பள்ளியிலதான் படிச்சேன்.
காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ்ல நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.
ஏன்னா, எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்க ஆர்வம் அதிகம். எப்படியாவது சினிமாவுக்குள்ள போயிடணும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன்.
சினிமா மேல எனக்கு ஈர்ப்பு வந்ததுக்குக் காரணம், எங்க அண்ணன் ஹரி. அவர் சினிமா தயாரிப்பாளரா இருந்தார்.
வீட்டுல எப்பவுமே சினிமாவைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பார். காலேஜ் படிப்பு முடிஞ்சதும் மும்பையில இருக்கிற ஒரு கம்பெனியில காப்பி ரைட்டர் வேலைக்குப் போயிட்டேன்.
அப்போ, இயக்குநர் பரதன் அறிமுகம் கிடைச்சது. எங்க அண்ணனைப் பார்க்க வரும்போது, எங்கிட்டேயும் அடிக்கடி பேசுவார்.
அவருக்கு என்னைய ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அதனால, அவருடைய மலையாளப் படமான ‘தகாரா (Thakara)’ல சின்ன கேரக்டர்ல நடிக்க வெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ்ல எனக்கு முதல் வாய்ப்பு கிடைச்சது.
பாலுமகேந்திரா சார் என்னோட ஆல்பத்தைப் பார்த்துட்டு, அவர் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கு ஹீரோவா கமிட் பண்ணார்.
இந்தப் படம் பண்ணும்போது பாலுமகேந்திரா சார் பெரிய இயக்குநர் கிடையாது. அவர் இயக்கிய இரண்டாவது படம் இது.
படத்துல என் நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனால, தொடர்ந்து அவர் படங்கள்ல எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தார். பல தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு, என்னை நடிக்க வெச்சிருக்கார்.
‘மூடுபனி’ என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். ஏன்னா, இந்தப் படத்துல சைக்கோ கேரக்டர்ல நடிச்சேன்.
இந்தப் படத்துக்குப் பிறகுதான் எனக்கு நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் கிடைச்சது. பாலுமகேந்திரா சார் என்மேல எப்போவும் நிறைய நம்பிக்கை வெச்சிருப்பார்.
‘என் இனிய பொன் நிலாவே’ பாட்டு ஷூட்டிங் நடக்கும்போதே, இந்தப் பாட்டு செம ஹிட் ஆகும்னு ஸ்பாட்ல இருந்த பலரும் சொன்னாங்க.
இந்தப் பாட்டைக் கேட்கும்போது எனக்கு நடிகை ஷோபா ஞாபகம்தான் வரும். ஏன்னா, இந்தப் பாட்டு எடுத்து முடிச்ச கொஞ்சநாள்ல ஷோபா இறந்துட்டாங்க.
நல்ல நடிகை. என் முதல் படத்தோட ஹீரோயின். ரொம்ப சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. அவங்க மரணம் எனக்குப் பேரதிர்ச்சியா இருந்துச்சு.
‘மூடுபனி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ரெண்டு படமும் தீபாவளி அன்னைக்கு ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. ரெண்டு படமும் என்னை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்கிறோமோனு தோணுச்சு.
நடிக்கிறதுக்கு முன்னாடி, டைரக்ஷன் பண்ணதான் ஆர்வம் இருந்தது. அதனால, படங்களை இயக்கவும் ஆரம்பிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்தது. நான் படிக்கிற ஆங்கிலப் புத்தகங்கள்ல வர்ற கதைகளை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிடுவேன்.
அப்படி எழுதுன கதைதான், ‘வெற்றி விழா’ படம். இந்தப் படம் நூறு நாளைக்கு மேல ஓடி சூப்பர் ஹிட் ஆச்சு. ‘சீவலப்பேரி பாண்டி’ படமும் என் வாழ்க்கையில மறக்க முடியாத படம்.
இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சு உருவாக்குனது. நண்பர் ஒருவர் சீவலப்பேரி பாண்டியைப் பற்றிய கதையைச் சொன்னார். கேட்டதும் எனக்குப் பிடிச்சுப் போனதுனால, உடனே அதைப் படமாக்கிட்டேன்.
நடிகை சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். திறமையான நடிகை. அவங்களும் சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க.
என்னோட ‘ஜீவா’, ‘லக்கிமேன்’ ரெண்டு படத்துல அவங்க நடிச்சிருப்பாங்க. மலையாளத்துல சிவாஜி கணேசன், மோகன்லாலை வைத்து ‘ஒரு யாத்ரா மொழி (Oru Yathramozhi)’ எடுத்தேன்.
இதுதான் கடைசியா நான் இயக்கிய படம். இதுக்குப் பிறகு சினிமாவுல சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சுக்கிட்டு இருந்தேன்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில நடுவரா இருந்தேன். இப்போ உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குது.
அதனால, வீட்டுல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். கிடைக்கிற இடைவெளியில நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். மீண்டும் டைரக்ஷன் பண்ற ஐடியா இருக்கு.
அதுக்கான வேலைகள்ல தீவிரமா இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பெங்களூரில் செட்டில் ஆயிட்டா. அவ்வளவுதான். மத்தபடி, வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கேன்!” என்று முடிக்கிறார், பிரதாப் போத்தன்.