17 பேரின் உயிரைப் பறித்த பேருந்து ஓட்டுநரின் வேகம்!

உத்தரப்பிரதேசத்தில் தனியார் பேருந்தை வேகமாக இயக்கியதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மெயின்புரி என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிகவும் வேகமாக இயக்கியதால், நிலை தடுமாறிய பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக உத்தரப்பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தை வேகமாக ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சற்று சரியானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அறிந்து தான் மிகவும் மன வேதனை அடைந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு வேகமாகவும் சிறப்பான முறையிலும்  மருத்துவ உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.