எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை” என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக அரசியலாக்கிக் கொண்டிருப்பதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இதைத்தான் எங்களின் கருத்தாகவும் பதிவு செய்கிறேன். சென்னை – சேலம் பசுமைத் திட்டம், பின் தங்கிய ஐந்து மாவட்டங்களுக்குப் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது. ஆனால், இதற்கு மிகத்தவறான பிரசாரங்களைச் சில குறிப்பிட்ட நபர்கள், சில குறிப்பிட்ட கட்சிகள் மறுபடியும் அதை ஒரு தூத்துக்குடியாக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, சூழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் பலியாகிவிடக் கூடாது.
எதிர்க்கட்சித் தலைவர், அங்கே ஒரு பிரச்னை ஏற்பட்டுவிடாதா, அதன்மூலம் அரசியல் குளிர்காயலாமா என்கிற சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ, அதே கடமை எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுவும், எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. காவலாளிகளின் கடமை. அது எல்லாம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்கிற அளவில் எடுத்துச் சென்றது அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு காரண காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.
தமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகர் பிரச்னையை முன்னிறுத்தி அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசியலில் ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிரிக்காக அவ்வளவு போராடினார்கள். நேற்றோடு கர்நாடகாவின் டைம்லைன் முடிந்துவிட்டது. உறுப்பினரை இன்னும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி யாராவது பேசுகிறோமா. ஒருவேளை எடியூரப்பா அங்கு வந்து, ஓர் உறுப்பினரைக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் ஒருவேளை பெங்களூருக்கே பாதிதூரம் போயிருப்பார். ஆனால், இன்றைக்கு அப்படியே அமுக்கமாக இருக்காங்க. அவங்களுக்கு பிரச்னை காவிரி கிடையாது. மோடி எதிர்ப்புதான். அவர்கள் எதிர்மறை அரசியலிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேர்மறை அரசியலுக்குத் திரும்பட்டும்.
ஒரு எஸ்.வி.சேகரைப் பார்த்து 89 எம்.எல்.ஏவும் வெளியே போனீர்கள் என்றால் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள். இது ஒன்றுதான் தமிழகத்தின் மக்கள் பிரச்னையா, எனது கருத்துப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது காரணத்தைக் காண்பித்து வெளிநடப்புச் செய்வதில் குறியாக இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது ஒன்றுமே இல்லாததை எடுத்து மக்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில்தான் இவர்கள் அரசியல் இருக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார்.
தன்னை முன்னிலைப்படுத்தி இந்து – முஸ்லிம் பிரச்னையை ஏற்படுத்துவதாக அமீரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை, “அமீருக்கே தெரியும் அவர் சொல்வது தப்புன்னு. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமீர் எந்த அளவுக்கு நாகரிகமாகப் பேசினார் என்பதை அவர்களே சொல்லட்டும். அங்கு கலந்துகொண்ட எந்தத் தலைவரும் பேசும்போதும் பிரச்னை வரவில்லை. அமீர் பேசும்போது ஏன் பிரச்னை வந்தது என்றால் அவர் அந்த உணர்வைத் தூண்டினார். நாங்கள் எங்கும் பிரிவினையாகப் பேசவில்லை. கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை இடறும்படி பேசினால் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்” என்று கூறினார்.