18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கும்… 3 தீர்ப்பும்!

எடப்பாடி Vs தினகரன்: திருப்புமுனை வழக்கு! 

டப்பாடி பழனிசாமி Vs டி.டி.வி.தினகரன் மோதலில் முக்கியத் திருப்புமுனை, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தமிழகச் சட்டமன்ற சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்த நிகழ்வு! எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்கக்கோரி, கவர்னரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்ததற்காக, சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார். 2017 செப்டம்பர் 18-ம் தேதி சபாநாயகர் பிறப்பித்த இந்த உத்தரவு, அன்றே தமிழக அரசின் கெஜட்டிலும் இடம்பிடித்தது. உடனடியாக அந்த விவரங்கள், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டது. தினகரனின் பலமிக்க ஆயுதங்களாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தினகரனுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. அதையடுத்து அந்த எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். 18 எம்.எல்.ஏ-க்களுக்கும் `கவுன்சில் ஆன் ரிக்கார்ட்’ டாக இருந்து வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனுத்தாக்கல் செய்தார். டெல்லியின் சட்டப்புலிகள் வரிசையாக வந்து இந்த வழக்கை நடத்தினர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர்களான துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வாதடினர். சபாநாயகர் தனபால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பு எப்படி வரும் என்பதைப் பொறுத்து, எடப்பாடி அரசாங்கம் மற்றும் தினகரனின் அரசியல் எதிர்காலத்தின் பாதை மாறும்! அதையொட்டி தமிழக அரசியலின் ஒட்டுமொத்தக் கணக்குகளும் திருத்தி எழுதப்படும். அதனால், ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு?’ என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எகிறிக்கிடக்கிறது!

தம்பிதுரை, எடப்பாடி, தினகரன்

தீர்ப்பு எப்போது வரும்?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் ஆரம்பத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. அதன்பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி-சுந்தர் அமர்வுக்கு மாறியது. `பான்-பராக் குட்கா ஊழல் பிரச்னையில், அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்துக்குள் கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டதை எதிர்த்த வழக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு’ என மொத்தமாக 5 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றன. இவற்றில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி 2 வழக்குகளில் தீர்ப்பு வெளியானது. அவை அனைத்தும், ஏறத்தாழ மாநிலத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாகவே வந்தன. ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்போது தீர்ப்பு வாசிக்கப்படவில்லை. அதனால், அந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பில் இன்னும் அழுத்தம் கூடியது. ஒவ்வொருநாளும், அந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வரும், எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது. இந்த நிலையில், தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கான சூழல் கூடி வந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதற்கான வாய்ப்புகள் அருகில் வந்துள்ளன. ஜூலை மாதம் `கொலிஜியம்’ கூடி அதில் முடிவெடுக்க உள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதனால், அதற்குள் தலைமை நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இந்திரா பானர்ஜியோடு சேர்ந்து இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி சுந்தர், தற்போது மதுரையில் உள்ள உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இந்நிலையில், திடீரென அவர் நாளை(14.06.2018) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்விலிருந்து வழக்குகளை விசாரிக்க உள்ளார். அதன் காரணமாக, நாளையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது.

தீர்ப்பு எப்படி வரும்?

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைத்தது, ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு என இரண்டு வழக்கில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், `சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அது அரசியல் பார்வையாளர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துத்தரப்பிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்தநிலையில், இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பைப்போலவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கிலும் தீர்ப்பு வெளியாகுமா, இல்லையா? என்பதுதான் இப்போதைக்கு அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி! இதுபற்றி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினோம்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

விசாரணைக்கே உகந்தது அல்ல!

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க தாக்கல் செய்த வழக்கும், தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை எதிர்த்த வழக்கும் விசாரணைக்கே உகந்தவை அல்ல! இந்த இரண்டு வழக்குகளையும் ஆரம்பகட்டத்திலேயே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இதில் இத்தனை விமர்சனங்களை நீதிமன்றமும் நீதிபதிகளும் சந்திக்க வேண்டியதே இருக்காது. இந்த இரண்டு வழக்குகளும் விசாரணைக்கே உகந்தவை அல்ல என்பதற்குக் காரணம், “இந்த இரண்டு வழக்குகளிலும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்படி, அவர் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், `நீங்கள் இப்படித்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகளிடம் கேட்க முடியாது; சபாநாயகர் ஒரு முடிவை எடுத்திருப்பாரானால், அதைச் சீராய்வு செய்து, அதில் ஓர் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. ஆனால், சபாநாயகர் முடிவே எடுக்காதபோது, `ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் அவருக்கு உத்தரவிடமுடியாது.

சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால்

கட்சித்தாவல் தடைச் சட்டம் பொருந்துமா?

பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் மீதான தகுதி நீக்க வழக்கில், `கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டியதுதானே’ எனச் சிலர் முகநூலிலும் டி.வி பேட்டிகளிலும் கேட்டனர். அவர்களுடைய அந்தக் கேள்வியில், அவர்கள் அனைவரும் எதையோ எதிர்பார்த்து…. ஏமாந்தது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு கட்சித்தாவல் தடைச் சட்டத்திலேயே விசித்திரமான வழக்கு! கட்சித்தாவல் தடைச் சட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அந்தப் பிரதிநிதிக்கு, ஏதோ ஒருவகையில் ஆசைகாட்டி, வாக்குக் கொடுத்து, பேரம்பேசி, அவரை வேறோரு கட்சி தன்பக்கம் இழுத்துக் கொள்வதை, தடை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட நியாயமற்ற பேரத்தை தடை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அந்தச் சட்டத்தின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் இன்று வரை முழுமையாக நிறைவேறவில்லை. கடந்த 30 வருடகால வரலாற்றின் படிப்பினை அதை எடுத்துரைக்கிறது. சட்டத்தை ஏமாற்றி எதோ ஒரு வகையில் கட்சித் தாவல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ் வழக்கில் அப்படிக்கூட நாம் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், இந்த விவகாரத்தில் ஒரு கட்சி உடைந்து ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் என இரண்டு அணிகள் உருவாகின. இந்த அணியைக் கேட்டால், `நாங்கள்தாம் உண்மையான அ.தி.மு.க’ என்றனர்; அந்த அணியைக் கேட்கும்போது அவர்களும், `நாங்கள்தாம் உண்மையான அ.தி.மு.க’ என்றனர். இவர்களில் யார் உண்மையான அ.தி.மு.க என்பதை யார் உறுதி செய்வது, எப்படிச் செய்வது? இது கட்சித்தாவலுக்குள் வருமா? அதற்கான சட்டம் என்ன? என்பதெல்லாம் கட்சித் தாவல் தடைச்சட்டத்தில் தெளிவாக இல்லை. இதற்கிடையில் பன்னீரும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து, `நாங்கள்தாம் அ.தி.மு.க’ என்று சொல்லிவிட்டார்கள். அவர் செய்த தவற்றை இவர் ஏற்றுக்கொண்டார்; இவர் செய்த தவற்றை அவர் ஏற்றுக்கொண்டார். தற்போது இருவரும் மகிழ்ச்சி. இந்தநிலையில், இணைந்த அணிகளிலிருந்து 18 எம்.எல்.ஏ-க்களைப் பிரித்து டி.டி.வி.தினகரன் தனி ஆவர்த்தனம் தொடங்கினார். அது தனிக்கதை. ஆனால், பன்னீர்-பழனிசாமி விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் மற்றொரு கட்சி(தி.மு.க)தலையிட்டு, சபாநாயகரை ஒரு பார்ட்டியாகக் கொண்டுவந்து, ஓ.பன்னீர் செல்வம்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எப்படிக் கேட்க முடியும்? அப்படிக் கேட்க எந்த உரிமையும் இல்லை; சட்டத்தில் அதற்கு இடமும் இல்லை; அப்படிக் கேட்பது தவறு!

தினகரனுக்குப் பாதகமாக மூன்று வாய்ப்புகள்!

இந்த இரண்டு வழக்குகளின் படிப்பினையை வைத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வரும் சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருஎன்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அதில் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. அவை மூன்றும் தினகரனுக்குப் பாதகமாகவும், எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாகவும்தான் இருக்கின்றன.

முதல் வாய்ப்பு: இந்த வழக்கிலும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுதான் தீர்ப்பு வரும். 99 சதவிகிதம் இப்படித் தீர்ப்பு வருவதற்குத்தான் சட்ட வாய்ப்புக்கள் உள்ளன.

இரண்டாவது வாய்ப்பு: இந்த வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவை, சில கூறுகளின் அடிப்படையில் சீராய்வு செய்து, “18 எம்.எல்.ஏ-க்களிடம் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் விசாரணை நடத்தி முடிவெடுங்கள்” என நீதிமன்றம் சொல்லலாம்; ஆனால், அதற்குக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. அந்த முடிவை சபாநாயகர் எடுப்பதற்கு ஆகும் இடைப்பட்ட காலகட்டத்தில், தினகரனை ஆதரித்த அந்த 18 பேர் எம்.எல்.ஏ-க்களாக நீடிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிடலாம். மாறாக, சபாநாயகர் ஏற்கெனவே அறிவித்தபடி, `எம்.எல்.ஏ என்ற தகுதியை இழந்த நிலையிலும் இருக்கலாம்.

மூன்றாவது வாய்ப்பு: சபாநாயகர் சில கூறுகளின் அடிப்படையில் அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.ஏ-க்களாகவே நீடிக்கலாம்; ஆனால், சட்டமன்றத்துக்குச் செல்லக் கூடாது என்று வரலாம். இந்த மூன்று வாய்ப்புகளில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அது, இப்படித்தான் வரவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், மற்றொரு தரப்பு மேல் முறையீட்டுக்காகப் போகப் போகிறார்கள். அப்படிப் போகும்போது, இந்த வழக்குகள் அனைத்துமே இப்போதைக்கு முடியும் சட்டப் பிரச்னையாக இருக்கப்போவதில்லை என்றார்.

ஓ.பி.எஸ் வழக்கு தினகரன் வழக்கை பாதிக்காது!

ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், சென்னை உச்ச நீதிமன்றம், `சபாநாயகர் உத்தரவில் தலையிட வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்முடியாது’ என்று தீர்ப்பளித்துவிட்டார். இந்தத் தீர்ப்பில், அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேநேரத்தில், இதேபோன்ற தீர்ப்புத்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கிலும் வெளியாகும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அதுபற்றி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம்.

பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை பாதிக்காது.

ஏனென்றால், பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் “சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை; அதனால், நாங்கள் அதில் எந்தச் சீராய்வும் செய்ய முடியாது; முடிவை உடனடியாக எடுக்கச் சொல்லி சபாநாயகருக்கு உத்தரவும் கொடுக்க முடியாது” என்று தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது. ஆனால், 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் சபாநாயகர் ஒரு முடிவை எடுத்துள்ளார். எனவே, அவற்றைச் சீராய்வு செய்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படித்தான், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுத்ததை சீராய்வு செய்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, அந்த உத்தரவை ரத்து செய்தது. அதுபோல, தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கிலும் சபாநாயகர் உத்தரவில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்று தலைமை நீதிபதி அமர்வு சீராய்வு செய்யும். அதற்குத் தகுந்த வகையில், சபாநாயகர் செய்துள்ள தவறுகளை நாங்கள் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம். அதனால், அந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை பாதிக்காது.