சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தின் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் சிக்காமலிருக்க இரண்டு பைக்குகள் மின்னல் வேகத்தில் சென்றன. அந்த பைக்குகளை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்துள்ளார், போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி.
சென்னையில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, சென்னை போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை முழுவதும் வாகனச் சோதனையில் போலீஸார் விடிய விடிய ஈடுபட்டனர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரிடம் சிக்கினர்.
அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகில் போலீஸ் இணை கமிஷனர் (தென்சென்னை) மகேஸ்வரி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் இரண்டு பைக்குகளில் நான்கு பேர் வந்தனர். அவர்களை போலீஸார் மடக்கினர். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதைப் பார்த்த போலீஸார், இரண்டு பைக்குகளைப் போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்தனர். இதை அறிந்த பைக்குகளில் சென்றவர்கள், வேகத்தை அதிகரித்தனர். இதனால் போலீஸாரும் அவர்களைப் பிடிக்க அதிரடி காட்டினர். வாக்கி டாக்கியில் அடையாறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சிக்னல்களிலும் இரண்டு பைக்குகளில் சென்றவர்களைப் பிடிக்க போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தினர். ஆள்நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்பதால் பைக்குகளில் சென்றவர்களைத் தடுப்புகளில் நுழைந்து தப்பிச் சென்றனர். இதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதற்குள் பைக்குகளில் சென்றவர்கள் அடையாறு பகுதிக்குச் செல்லும் மேம்பாலத்தில் ஏறினர். போலீஸார் மேம்பாலத்தில் அவர்களை விரட்டினர்.
இந்தத் தகவல் இணை கமிஷனர் மகேஸ்வரிக்குத் தெரியவந்ததும் அவரே களத்தில் இறங்கினார். அடையாறு மேம்பாலத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே பைக்குகள் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகளை வைத்தனர். பைக்குகளில் வந்தவர்களைப் பிடிக்க போலீஸாரும் தயாராக அங்கு நின்றுகொண்டிருந்தனர். இதனால், பைக்குகளின் வேகத்தை அவர்கள் குறைத்தனர். இருப்பினும் தடுப்புகளில் மோதி கீழே விழுந்தனர். இதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. மற்ற இரண்டு பேரை அலேக்காகத் தூக்கிய போலீஸார், காயமடைந்தவர்களுக்கு முதலுதவிசெய்தனர். பிறகு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பைக்குகளில் வந்தவர்களிடம் வாகனத்துக்குரிய சான்றிதழ்கள் இல்லை என்பதால், போலீஸாரிடம் சிக்கி அபராதம் செலுத்தாமலிருக்கத் தப்பிக்க முயன்றது தெரியவந்தது. தடுப்புகளில் மோதி காயமடைந்த இரண்டு பேருக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. அவர்களின் பைக்குகளை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
பைக்கில் சென்றவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. துணிச்சலாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இணை கமிஷனர் மகேஸ்வரியிடம் கேட்டதற்கு, “வாகனச் சோதனையின்போது இரண்டு பைக்குகளில் வந்தவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்துள்ளோம்” என்றார் சுருக்கமாக.
போலீஸார் கூறுகையில், “அடையாறு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோதுதான், நள்ளிரவில் இரண்டு பைக்குகள் எங்களைக் கடந்துசென்றன. அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்றபோது, தடுப்புகளில் மோதி இரண்டு பேர் காயமடைந்தனர். சுமார் இரண்டு கிலோ மீட்டர் பைக்குகளில் சென்றவர்களை விரட்டினோம். இந்தச் சம்பவத்தால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பைக்குகளில் சென்றவர்கள் வேகத்தை அதிகரித்ததால், அவர்கள் சமூக விரோதக் கும்பலாக இருக்கலாம் என்று முதலில் கருதினோம். ஆனால், எங்களிடம் பிடிப்பட்டபோதுதான் அவர்கள் தப்பிச் சென்றதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பிடிப்பட்டவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்” என்றனர்.