இத்தாலியில் உயிருடன் இருக்கும் புலிகளின் தலைவர் யார்? சுவாமி சொல்வது யாரை?

ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை வரவேற்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.

இந்த ட்வீட் பதிவின் முடிவில், தலைமை சதிகாரர் இத்தாலியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய சதிகாரர்கள் எனக் குறிப்பிடப்படுவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் இருவரும் தான்.

இலங்கையில் யுத்தம் 2009-ல் முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாருமே இல்லை எனவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது சுப்பிரமணியன் சுவாமி, முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டம்மானையா? என்பதுதான் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிற கேள்வி.