“பிக் பாஸ் ஒரு எபிசோட்கூட பார்க்கலை, இனியும் பார்க்க மாட்டேன்!” – சினேகன்

`நீங்க நீங்களாகவே இருங்க. எதையும் மறைக்காதீங்க. ரொம்ப நாளைக்கு உங்க இயல்புல இருந்து மாறி நடிக்க முடியாது. `சுயரூபம்’ ஒருநாள் கட்டாயம் வெளிப்பட்டே தீரும்.” என்று பிக் பாஸ் வீட்டுக்குள் நிகழ்ந்தவற்றை நினைவு கூறுகிறார் சினேகன். பிக் பாஸ்-2 போட்டியாளர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் இவைதாம்.

சினேகன்

“ `பிக் பாஸ்’க்கு முன்னாடி வாழ்க்கை எப்படி இருந்துச்சு, இப்போ எப்படி இருக்கு?”

“எங்கிருந்து பார்த்தாலும் ஆகாயம் எப்படித் தெரியுமோ, அதேமாதிரி சினேகனைப் பற்றியும் இந்த உலகம் முழுக்க தெரியும். ஏற்கெனவே எனக்குனு இருந்த பெயரும் முகமும் ஒருசேர வெளிய தெரிய வந்துருக்கு. எனக்குள்ள இருந்த ஒருத்தனை வெளியே கொண்டு வந்து மத்தவங்களுக்குப் பரிச்சயப்படுத்துனது பிக் பாஸ்தான்.  பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்தபிறகு பல பொது நிகழ்ச்சிகள்ல கலந்துகிறதிலேயே ஒரு வருடம் போயிடுச்சு. என் வேலைகள் எதுவுமே பண்ணமுடியலை. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு வீச்சைக் கொடுத்திருக்கு.”

“சீஸன்-2 போட்டியாளர்களுக்கு நீங்க சொல்ல விரும்புற அறிவுரை…”

“அவங்க அவங்களாகவே இருக்கிறதைத்தான் மக்கள் விரும்புறாங்க. இதை பிக் பாஸ் சீஸன்-1 நிரூபிச்சது. தன்னை நல்லவர்களா காட்டிக்க வேஷம்  போட்ட யாரும் மக்கள்கிட்ட போய் சேரலை. நம்மளோட இயல்புல இருந்து மாறாம இருக்கணும்ங்கிறதுதான் இந்த நிகழ்ச்சியோட சூத்திரம். நாங்க செய்த எந்தத் தவற்றையும் நீங்க செஞ்சுடாதீங்க. உங்களுக்கான ஒரு பாடமா நாங்க ஒரு வருடத்துக்கு முன்னாடியே இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை சந்திச்சிருக்கோம். அதைப் புரட்டிப் பார்த்தாலே போதும். உண்மையிலேயே கொடுத்துவச்சவங்க நீங்கதான். உள்ளே எப்படி இருக்கணும்ங்கிற பாடத்தை உங்களுக்குச் சொல்லிக்கொடுக்க எங்களை நாங்கள் பலி கொடுத்துருக்கோம்.”

“பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தப்போ உங்களுக்குள்ள நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன?”

“கமல் சார் மேல உள்ள காதலாலதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போக சம்மதிச்சேன். போன பிறகு முதல் இரண்டு வாரம் ரொம்ப பயமா இருந்துச்சு. வெளி உலகத்தோட எந்தவிதத் தொடர்பும் இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டம். என் துணையா எப்போதும் நான் கேட்கிறது காகிதமும் எழுதுகோலும்தான். அதுவே அங்கே இல்லைங்கிறப்போ, எப்படி நாள்களைக் கடத்துறதுனே தெரியலை. அங்கே சில மனிதர்களைப் பார்க்கும்போது, `நமக்காவது சில அனுபவங்கள் இருக்கு. இவங்க நம்மளைவிட சின்னவங்க. அனுபவமும் கம்மி. எப்படி இந்தச் சூழலை சமாளிக்கப்போறாங்கனு தெரியலையே’னு நினைச்சேன். அதனால என் சில குணங்களை அப்படியே மூட்டைகட்டி வெச்சுட்டேன். ரொம்ப அன்பானவனா இருந்ததுனாலேயே அதிகம் ஏமாற்றப்பட்டவன் நான். என்னால யாரும் ஏமாந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே முழுக்க முழுக்க என்னை நான் மத்தவங்களுக்காக அர்ப்பணிச்சுட்டேன்.

சினேகன்

எனக்கும் கோபம் வரும். என்னுடைய அலுவலகத்துல என்னை எல்லோரும் ஹிட்லர்னுதான் கூப்பிடுவாங்க. `ஒரு பேப்பர் எடுத்தா அதை எடுத்த இடத்துல வைக்கணும், அழுக்குத் துணியைக்கூட மடிச்சு வைக்கணும்’னு கட்டளையிடுவேன். பிக் பாஸை இப்போ நீங்க ரீவைண்டு பண்ணிப் பார்த்தீங்கன்னா, நான் சொல்றது உங்களுக்குப் புரியும். என் படுக்கை மட்டும் எப்போதும் சுத்தமா இருக்கும். அதேமாதிரி என்னோட அலமாரியிலேயும் எல்லா துணிகளையும் மடிச்சு வெச்சிருப்பேன். அதுல எது துவைச்சது, எது அழுக்குனு உங்களால கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு எல்லாம் சரியா இருக்கணும்னு நினைப்பேன். பிக் பாஸ் வீட்டையே சுத்தமா வெச்சுக்கணும்னு நினைச்சேன். மத்தவங்க அதுக்கு ஒத்துழைக்காதப்போ, நானே எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சேன். பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததும், ரசிகர்கள்கிட்ட இருந்து எனக்கு வாட்ஸ்அப் மெசேஜ்கள் வந்துச்சு. அதையெல்லாம் வெச்சு ஒரு புத்தகமே எழுதலாம். என் நிறை குறைகளை மக்கள் தெளிவா விளக்கங்களோட எழுதியிருந்தாங்க. ஒரு தொலைக்காட்சி நிகழ்வு ஒரு மனிதனை இவ்வளவு மாற்றியிருக்குனு நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்கு. நான் இதுவரை ஒரு பிக் பாஸ் எபிசோட்கூட பார்க்கலை. இனிமேலும் பார்க்க மாட்டேன்னு என் தாய்மேல சத்தியமா சொல்றேன்.

பிக் பாஸ் முடிஞ்சு மூணு வாரமா என் வீட்டுக்கு நான் போகவேயில்லை. பிக் பாஸ் வீட்டை மறந்துட்டு என் வீட்டுக்கு என்னால போகமுடியலை. நிறையபேர் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்காங்கனு அம்மா சொன்னாங்க. மீடியாவுல `சினேகனைக் காணவில்லை’னு நியூஸ்கூட போட்டாங்க. மனசு சரியில்லாம ஒரு ஹோட்டல்ல அறை எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போ என்னைப் பாதுகாப்பாவும், பத்திரமாவும் பார்த்துக்கிட்டது இசையமைப்பாளர் தாஜ்நூர்.

அங்கே இருந்த போட்டியாளர்கள்கிட்ட ஏற்பட்ட உறவு, காலம் கடந்து நிற்கும். முடிந்த அளவுக்கு அன்பையும் மன்னிப்பையும் கொடுத்துக்கிட்டே இருக்கணும். அதுபோதும். சினேகன் வாட்டசாட்டமான பையன் கிடையாது. இருந்தாலும் என்னை மத்தவங்களுக்குப் பிடிக்கக் காரணம், அன்பும் மன்னிப்பும்தான். நான் பீச்சுக்குப் போகும்போது அங்கே இருக்கிறவங்க, `அந்தப் பயலுங்களுக்குச் சமைச்சுப் போட்டு இளைச்சுப் போயிட்டியே நீ. வா எங்க வீட்ல வந்து சாப்பிடு’னு சொன்னாங்க. வடபழனி ஃபோரம் மால்ல இரண்டு மருத்துவப் பெண்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து, `எங்களையும் கட்டிப்பிடிங்க சார். நாங்களும் உங்க தேவதைகள்ல ஒருத்தவங்கதான். நீங்க உங்க இயல்புல இருந்து மாறாதீங்க. யார் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் சார்’னு சொன்னாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட அன்பு மட்டும்தான். கண்டிப்பா பிக் பாஸ் நடத்துற நிறுவனத்துல கிரியேட்டிவிட்டி டீம்ல நான் வேலை பார்க்கணும்னு நினைக்கிறேன். நல்லதை நடத்துறதுல நானும் ஒரு பங்கா இருக்கணும்.”

“பிக் பாஸ் வீட்டுக்குள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை…”

“நீங்க நீங்களாகவே இருங்க. எதையும் மறைக்காதீங்க. ரொம்ப நாளைக்கு உங்க இயல்புல இருந்து மாறி நடிக்க முடியாது. `சுயரூபம்’ ஒருநாள் கட்டாயம் வெளிப்பட்டே தீரும். வீட்டுக்குள்ள யார்கூடயும் சண்டைபோட முடியாதுங்கிற நிலைமை வர்றப்போ நிறைய தடவை அழுதிருக்கேன். அழுகை இயலாமையோட வெளிப்பாடுதான். கமல் சார்கிட்ட ஒருதடவை என் குடும்பத்தோட சண்டை போட முடியாது. என்னை எலிமினேட் பண்ணிருங்க. என் பலத்தோட விளையாடுறதைவிட பலவீனத்தோடதான் எல்லோரும் விளையாடுறாங்க’னு சொல்லி அழுதேன். அதுக்கு கமல் சார், `கண்ணீர் உங்களோட பலவீனம் இல்லை. அது உங்களோட ஆயுதம். அதோட விளையாடுங்க’னு சொல்லி அனுப்பினார். வீட்டுக்குள்ள ஏற்படுற சவால்களை ஜாலியா சமாளியுங்க பிக் பாஸ்-2 போட்டியாளர்களே!”

“அடுத்தது என்ன?”

“ `பொம்மி வீரன்’ங்கிற என் படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. கூடிய விரைவில் படம் ரிலீஸ் ஆகும். தவிர, மூணு படங்கள்ல ஹீரோவா கமிட் ஆகியிருக்கேன். அதிகாரபூர்வமான அறிவிப்பு சீக்கிரமா வரும். சொந்தமா ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கலாம்னு இருக்கேன்.”