தங்க தமிழ்ச்செல்வன் மனுவை வாபஸ் வாங்கப்போவதாகக் கூறிவிட்டார். மற்றவர்கள், லீகலா ஃபைட் பண்ணிடுவோம்னு சொல்லிவிட்டார்கள்’ என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ள நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுவை வாபஸ் பெறப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க அம்மா முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
தங்க தமிழ்ச்செல்வன் மனுவை வாபஸ் வாங்கப்போறோம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
“எல்லாரும் கிடையாது. தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை வைத்தார். மற்றவர்கள் வேண்டாம், நாம லீகலா ஃபைட் பண்ணிடுவோம்னு கூறிவிட்டார்கள். தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாருனா, ‘3-வது நீதிபதியிடம் வழக்கு வரும்போது மனுவை வாபஸ் வாங்கிட்டு, தேர்தலில் நின்னு ஜெயிச்சிடுவோம். குக்கர் சின்னத்தில் நிற்கிறேன்’ என்று சொன்னாரு. அவர் சொல்றது கரெட்டாதான் இருக்கு. நேற்றுதான் சரி என்று சொன்னோம். மூன்றாவது நீதிபதியிடம் வழக்கு விசாரணைக்கு வரும்போது, வாபஸ் மனுவை தாக்கல்செய்வார். நீதிமன்றம் எப்படி முடிவு எடுக்கிறது என்று அப்புறம் பார்ப்போம். மற்ற எம்.எல்.ஏ-க்கள் லீகலா ஃபைட் பண்ணுவோம் என முடிவு எடுத்துவிட்டார்கள்.”
நீதித்துறைமீது நம்பிக்கை இல்லை என்று கூறித்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து?
“நீதித்துறைமீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கிறது என்று நீங்கள் (பத்திரிகையாளர்களைப் பார்த்து) ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள். அப்போது உண்மை தெரியவரும்.”
தீர்ப்பு அளிக்கும் நிலையில் இருக்கும்போது தற்போது வாபஸ் மனு போடுவது அவதூறாகப் போய்விடாதா?
“அப்படியெல்லாம் ஆகாது. நீதிபதிக்கிட்ட, அவர் வாபஸ் பெறுகிறேன் என்றுதான் கேட்கிறார். இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசியிருக்கிறோம். மறுபடியும் சில வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறோம். மனுவை வாபஸ் வாங்குவதில் என்ன தப்பு இருக்குனு எனக்குத் தெரியவில்லை. நீங்கதான் சொல்லணும்.”
ஏழு பேரையும் கருணைக்கொலை செய்துவிடலாம் என்று அற்புதம்மாள் கூறியிருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீங்க?
“ரொம்ப நாளாக பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். தாயோட மனம் புண்படுது. அவர்கள், 28 ஆண்டுகளுக்கு மேலாய் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றுதான் தெரிகிறது. எதனால் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் என்று தெரியவில்லை. மறுபடியும் மனுவை ஜனாதிபதி பரிசீலனைைசெய்து, அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலைசெய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.”
7 பேர் விவகாரத்தில் உங்களுடைய நிலை என்ன என்று தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த பதிலும் சொல்லவில்லை என்று அற்புதம்மாள் கூறியிருக்கிறாரே?
” ‘சீட்டில் உட்கார்ந்தால் போதும்’ என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பினால் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது, மக்கள் விரோத அரசு. அவர்கள் நலன், அவர்களுடைய குடும்ப நலன்களைத் தவிர, யாருடைய நலன்களிலும் அக்கறை இல்லை. ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்தியும், ஜெயலலிதா ஆட்சி என்றும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”