நள்ளிரவு 1 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கிய இளம்பெண் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கிய சாரதிக்கு விடிந்த பின்னர் குவிந்த பாராட்டுக்களினால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கொச்சியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆதிரா என்ற இளம்பெண் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார்.குறித்த பெண் இன்டிகோ விமான நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் பணி புரிகிறார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலத்தில் ஆதிரா இறங்க வேண்டும். சங்கரமங்கலத்தைப் பேருந்து அடையும்போது, நள்ளிரவு 1 மணியை கடந்துள்ளது.
நள்ளிரவில் இளம்பெண் ஒருவரைத் தனியாக விட்டுச் செல்ல பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு மனம் வரவில்லை.
குறித்த பெண் சகோதரர் வந்து கொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறி பேருந்தைவிட்டு இறங்கியுள்ளார்.
ஆதிரா இறங்கிய பின்னும் பேருந்து நகரவில்லை. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. ஆதிராவின் சகோதரர் 10 நிமிடம் கழித்து வந்தார்.
அதுவரை, அந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் அங்கேயே குறித்த பெண்ணின் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தது.
சகோதரருடன் அவர் புறப்பட்ட பின்னரே, பேருந்து நகர்ந்தது. முகம் தெரியாத பயணிக்கு உதவிய மனதிருப்தியோடு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி மீண்டும் ஓடியது.
விடிந்த பின்னர் எதிர்பாராத இடங்களில் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் இருவருக்கும் குவிந்துள்ளது.
என்ன ஏதுவென்று தெரியாமலேயே பேருந்தை ஓட்டிய கோபக்குமாரும், ஷிஜூவும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இருவருக்கும் வாழ்த்துக் குவிய காரணம்.
ஆதிராவின் முகப்புத்தகத்தில் பதிவு. நள்ளிரவில் தன் பாதுகாப்புக்காகப் பேருந்து நின்றது குறித்து தன் பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற முடியவில்லை. அதனால், முகப்புத்தகத்தின் வழியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் ஆதிரா குறிப்பிட்டுள்ளார்.