“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…?!” – நித்யா பாலாஜி

ந்த ஆண்டு `பிக் பாஸை’ டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் ‘தாடி’ பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா… இந்த இருவராகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிற சூழலில், பாலாஜி – நித்யா இருவரும் பிக் பாஸ் வீட்டிக்குள் செல்கிறார்கள். துணிமணிகளை பேக் செய்தபடி, நிகழ்ச்சிக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நித்யாவிடம் பேசினோம்.

நித்யா

“ஷோவுல கலந்துப்பீங்களானு என்கிட்ட கேட்டப்போ முதல்ல எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலை. `சீரியஸாத்தான் கேட்குறாங்களா… இல்ல காமெடி பண்றாங்களா?’னு சந்தேகமா இருந்தது. மறுபடியும் கூப்பிட்டுப் பேசுனப்போதான், நிஜமாதான் கேட்குறாங்கனு உறுதி படுத்திக்கிட்டேன்.

`பிக் பாஸ்’ முதல் சீஸனைப் பார்த்திருக்கேன். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைச்சிருக்கிற வரவேற்பு எனக்கு நல்லாவே தெரியும். `கலந்துகிட்டா, நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும்’னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், `இந்த சீஸன்ல பாலாஜியும் கலந்துக்கப்போறார்’ங்கிற தகவல் வந்தது.

முதல்ல, `எங்களை வெச்சு ஏதோ பெருசா பிளான் பண்றாங்களோ’னு தோணுச்சு. அதனால, `அவர் கலந்துக்கிறார்னா, நான் வரலை’னு சொன்னேன். விஜய் டிவிக்குத் தெரிஞ்ச முகம்ங்கிறதாலதான், உங்களை கேட்கிறோம். `இந்த நிகழ்ச்சி மூலமா உங்களுக்குள்ள இருக்கிற பிரச்னை சுமுகமான முடிவுக்கு வர்றதுக்கு வாய்ப்பாகவும் இதை நீங்க எடுத்துக்கலாம்’னு சொன்னாங்க. என்னை இந்த நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்ததுக்காக முதல்ல சேனலுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

பாலாஜி

அதேநேரம், எங்களுக்கிடையே ஓடிக்கிட்டு இருக்கிற பிரச்னை சுமுகமான முடிவுக்கு வரணும்னு நினைச்சு, நான் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலை. ஏன்னா, தப்பு பண்ணிட்டு, பலதடவை மன்னிப்பு கேட்டவர் பாலாஜி. டி.ஆர் சார், சிம்பு எல்லோருமே அவருக்கு அட்வைஸ் பண்ணாங்க. `நான் திருந்திட்டேன்’னு அவர் வாயால கேட்டு கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு. இப்போ என் மகளோட நான் இருக்கிற சூழலே எனக்கு நிம்மதியானதா இருக்கு. பிறகு எதுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில அவர் கலந்துக்கிறார்னு தெரிஞ்சும் நான் போறேன்னா, `நான் ஏற்கெனவே வேலை பார்த்துக்கிட்டு இருந்த இடங்களுக்கெல்லாம் போய் பிரச்னை பண்ணி, என்னை எந்த வேலைக்கும் போகவிடாம தடுத்திட்டார். அதனால, இப்போ நான் பிளே ஸ்கூல் ஒண்ணு தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கேன். என்னோட பொருளாதார ரீதியான தேவைகள் நிறைவேற இந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும்னு தோணுச்சு. அதனால சம்மதிச்சேன். தவிர, எனக்கு வர்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏன் விடணும்?” என்ற நித்யாவிடம், “ஷோவுல கலந்துக்கிறதைப் பத்தி உங்க மகள் போஷிகா என்ன சொன்னாள்?” எனக் கேட்டோம்.

“இப்பெல்லாம் எப்பவாவதுதான் அவ அப்பாங்கிற வார்த்தையை உச்சரிக்கிறா. நானா வலியப் போய் `அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கா’னுகூட கேட்டுப் பார்த்திருக்கேன். `இல்லம்மா’னுதான் சொல்றா. “ `பிக் பாஸ்’ ஷோவுல கலந்துக்கட்டுமா?”னு நான் அவளைக் கேட்டு, அவ சம்மதிச்ச பிறகுதான் சேனலுக்கு ஓகே சொன்னேன். `உங்க அப்பாவும் பிக் பாஸ் வீட்டுல இருக்கிறாராம்!’னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதில்… `கேர்ஃபுல்லா இரு மம்மி!’தான். மகளோட மனசு முழுக்க பயத்தை விதைச்சு வெச்சிருக்கிற எந்த அப்பாவையாவது நீங்க பார்த்திருக்கீங்களா?” என்கிறார்.