பொது கிணற்றில் குளித்த சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ளது வகாடி கிராமம். இந்த கிராமத்தில் தலித் அல்லாத மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிணற்றில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சிறுவர்களை கிணற்றில் இருந்து வெளியேற்றி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர்களை நிர்வாணப்படுத்தி குச்சிகள் மற்றும் பெல்ட்டுகளால் அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுவர்களை நிர்வாணமாக ஊரை வலம்வரச் செய்துள்ளனர்.
ஜூன் 10ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு தற்போது குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்.இ./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
மாநில அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது.