பிரிட்டனுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்!

பிரிட்டனில் கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா அளிக்க கடைப்பிடிக்கப்படும் புதிய விதிகளினால், அந்நாட்டுக்கு கல்வி கற்கச் செல்லும் பிறநாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சில திருத்தங்களுடன் கூடிய குடியேற்றக் கொள்கையை அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

அதில் பிரிட்டன் உள்துறை தெரிவித்திருப்பதாவது:

வெளிநாட்டு மாணவர்களுக்கான “டையர் 4′ விசாவுக்கு குறைந்த எண்ணிக்கையில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் நாடுகள் பட்டியலில், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த முடிவு வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

பிரிட்டனுக்கு வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க எளிதில் வர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் பிரிட்டன் உள்துறை குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், குறைந்த அளவே ஆபத்தானவர்கள். அவர்களுக்கு விசா அளிக்க அதிக கெடுபிடிகள் காட்ட வேண்டாம் என்பது இதன் அர்த்தமாகும்.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், இந்தியா அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா கேட்டு விண்ணப்பிக்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய மாணவர்கள் அதிக கெடுபிடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்திய மாணவர்கள் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்படுவர். இந்திய மாணவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

பிரிட்டனின் புதிய முடிவு குறித்து அந்நாட்டு உள்துறை செய்தித் தொடர்பாளரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்,

பிரிட்டனில் இருக்கும் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களை வரவேற்கிறோம். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து, பிற நாடுகளைக் காட்டிலும் இந்திய மாணவர்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் விசா அளிக்கிறோம் என்று மட்டும் பதிலளித்தார்.

பிரிட்டன் வாழ் இந்திய தொழிலதிபரும், வெளிநாட்டு மாணவர்கள் விவகாரங்களுக்கான பிரிட்டன் கவுன்சில் தலைவருமான லார்ட் கரண் பிலிமோரியா கூறுகையில், இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு இது. அதேபோல், இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள தவறான செய்தி இதுவாகும் என்றார்.

தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஷனம் அரோரா கூறுகையில், சீன மாணவர்கள் அல்லது பிற நாட்டு மாணவர்களில் இருந்து வேறுபாடு காட்டப்படுவது இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார்.