இந்திய மாநிலம் கேரளாவில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்த 4 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இளம்பெண்ணும், இளைஞர்களும் செல்போனில் வீடியோ சாட்டிங் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். மட்டுமின்றி அந்த பெண்ணிடம் அதிக பணம் இருப்பதை 4 இளைஞர்களும் தெரிந்து கொண்டனர். அவர்கள் பெண்ணிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர்.
இதற்காக அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து ஆபாச படம் தயாரித்தனர். அந்த படத்தை இன்னொரு செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணிடம் செல்போனில் வேறு நபர் பேசுவதுபோல் பேசி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பணம் தர மறுத்தால் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர்.
பயந்து போன அந்த பெண், அவர்களுக்கு பல்வேறு தவணையாக ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தார். மேலும் அவரது நகைகளையும் வழங்கினார்.
பெண்ணிடம் இருந்து வாங்கிய பணம் மூலம் 4 இளைஞர்களும் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இச்சம்பவம் பொலிசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் 4 இளைஞர்களையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. 4 இளைஞர்களும் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டபோது, அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வருமாறு அந்த பெண் அழைப்பதுபோல் பொலிசார் அழைத்தனர்.
அதனை நம்பி வந்த 4 இளைஞர்களையும் பொலிசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொத்தகுளத்தைச் சேர்ந்த ஆதித்யன், வல்லப்பாட்டைச் சேர்ந்த அஜய், தலைக்குளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆதில் ஆகியோர் ஆவார்.
அவர்களிடம் இதுபோல வேறு யாரிடமாவது பண மோசடி செய்தார்களா என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.