கனடாவில் வாள்வெட்டுக்கு பலியான இளைஞர்: ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஒருவர் கவலைக்கிடம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்கார்பரோ பகுதியில் குறித்த வாள்வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

அதிகாலை 2 மணியளவில் பொலிசாருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் உயிருக்கு போராடும் இளைஞர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஞ்சிய இன்னொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டொராண்டோ பொலிசார், வாள்வெட்டில் ஈடுபட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும், விசாரணை துவக்க நிலையில் இருப்பதால் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது வீடியோ பதிவுகள் என பொலிசார் குறித்த விவகாரத்தில் தொடர்புடையை அனைத்தையும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.